ஃபார்முலா - 4 கார் பந்தயத்துக்கு தடை கோரி பாஜக சார்பில் வழக்கு


சென்னை: சென்னையில் ஃபார்முலா -4 ஸ்ட்ரீட் கார் பந்தயம் ஆக. 31,செப். 1-ம் தேதிகளில் நடக்க உள்ளது. இது தீவுத்திடலை சுற்றிலும் உள்ள வட்ட வடிவ சாலை மார்க்கமாக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மேற்பார்வையில் தனியார் நிறுவனம் சார்பில் நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில் இந்த கார் பந்தயத்துக்கு தடை விதிக்கக்கோரி தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘சென்னையில் நடைபெறவுள்ள இந்த ஃபார்முலா -4 ஸ்ட்ரீட் கார் பந்தயத்தை தனியார் நிறுவனம் நடத்தவுள்ளது.

இது சென்னையில் பொது போக்குவரத்து மற்றும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உள்ள சாலையில் இந்த கார் பந்தயத்தை நடத்துவது என்பது மோட்டார் வாகன விதிகளுக்கு முரணானது. எனவே சென்னையில் இந்த கார் பந்தயத்தை நடத்தக்கூடாது என தடை விதிக்க வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனக்கோரி வழக்கறிஞர் சன்னி ஷீன், பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முறையீடு செய்தார். அதையடுத்து நீதிபதிகள், மனு தாக்கல் செய்யும் நடைமுறைகள் முடிந்தால், இந்த வழக்கை இன்று (ஆக.28) விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

x