பழனிசாமி பற்றிய கருத்தை திரும்ப பெறமாட்டேன்: அண்ணாமலை திட்டவட்டம்


சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குறித்து தெரிவித்த கருத்துகளை திரும்பப் பெறமாட்டேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

பாஜக மூத்த தலைவர் டாக்டர்எச்.வி.ஹண்டே எழுதிய 2 புத்தகங்கள் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பிரதமர் மோடி சுதந்திர தின உரையாற்றும்போது, அரசியல் குடும்பத்துக்கு தொடர்பு இல்லாத 1 லட்சம் பேர் அரசியலுக்கு வர வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார். பாஜகவில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். செப்.1-ம் தேதி பிரதமர் மோடி பாஜகவின் முதல் உறுப்பினராக மீண்டும் சேர்கிறார். செப்.2-ம் தேதி தமிழக பாஜகவில் மூத்த உறுப்பினர் எச்.ராஜா முதல் உறுப்பினராக இணைவார். செப்டம்பர், அக்டோபரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறும். செல்போன் எண் கொடுப்போம். அதில் மிஸ்டு கால் கொடுத்தால், பாஜக தொண்டர்கள் உங்கள் வீட்டுக்கு வந்து படிவத்தைக் கொடுத்து உறுப்பினராக சேர்வதற்கு உதவுவார்கள்.

எனது 3 மாத மேல்படிப்புக்காக இன்றிரவு மோடி உள்ளிட்ட கட்சித்தலைவர்கள் அனுமதியுடன் லண்டன் செல்கிறேன். நான்லண்டனில் இருந்தாலும் ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுவேன். முதல்வரின் 3 வெளிநாட்டுபயணங்களும் தோல்வியடைந்துவிட்டன. அந்தப் பயணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படவில்லை. அமெரிக்கபயணமாவது தோல்வியடைக்கூடாது.

இந்தியா முழுவதும் பிஎம் ஸ்ரீ எனும் பெயரில் 16 ஆயிரம் அதிநவீன பள்ளிக்கூடங்கள் கட்டப்படவுள்ளன. இந்தப் பள்ளி தமிழகத்துக்கு வேண்டும் என கேட்டவர்கள், அதில் மும்மொழி இருப்பதால் இப்போது வேண்டாம் என்கிறார்கள். இந்தி வேண்டாம் என்று சொல்லுங்கள். அதற்குப் பதில் 3-வது மொழியாக மலையாளம், கன்னடம், தெலுங்கு, உருது என விருப்பப் பாடமாக படிக்க அனுமதிக்கலாம்.

நான் கையை, காலை பிடித்துத்தான் பதவிக்கு வந்தேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சொன்னார். அதற்கு பதில் கொடுக்க வேண்டியது எனது கடமை. பாஜக மாநிலத் தலைவர் இருக்கைக்கு ஒரு மரியாதை இருக்கிறது. அதனால்தான் அவருக்கு பதில் சொன்னேன். அந்த கருத்துகளை ஒருபோதும் திரும்பப் பெறமாட்டேன்.

பார்முலா-4 கார் பந்தயம் நடத்துவதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஒருவரின் பான் நம்பரை கொடுத்து அதில் பணம் அனுப்பச் சொல்லி,கோடிக்கணக்கில் வசூல் செய்தனர் என்று குறிப்பிட்டேன். அதனால் இப்போது அந்தப் பணத்தை திருப்பி கொடுக்கிறார்கள். இதுதொடர்பாக என் மீதுவழக்குப் போட்டால் உரிய ஆவணங்களை வெளியிடுவேன் என்பதால் வழக்குப் பதிவு செய்யவில்லை. இவ்வாறு தெரிவித்தார்

x