நிர்வாக பணிகள் தொய்வின்றி தொடர அமைச்சர், அதிகாரிகள் சிறப்பாக செயல்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்


சென்னை: தமிழக அரசின் நிர்வாகப் பணிகள் தொய்வின்றித் தொடர, அமைச்சர்களும் அதிகாரிகளும் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் என்று அமெரிக்கப் பயணம் தொடர்பான மடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய மடலில் கூறியிருப்பதாவது: முந்தைய ஆட்சியில் தேங்கியிருந்த தொழில் வளர்ச்சியை மீட்டெடுத்து, தமிழகத்தை பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார இலக்கை அடைய அமெரிக்கா பயணிக்கிறேன்.

தமிழக முதல்வரான பின் ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் நாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்க்கும், புதிய தொழிற்சாலைகளை உருவாக்கும் வகையில் பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இந்தாண்டு ஜனவரியில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டதன் வாயிலாக, கடந்த 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடிக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. மேலும்,தொழிற்சாலைகள் அமைப்பதற்கான சூழல்களை உருவாக்கி, அடிக்கல் நாட்டு விழாக்கள், தொழிற்சாலை தொடக்க விழாக்களையும் அரசு மேற்கொள்கிறது.

கடந்த ஆக.21-ம் தேதி நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் மட்டும் ரூ.17,616 கோடி மதிப்பிலான 19 நிறைவடைந்த திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. மேலும் ரூ. 51,157 கோடி மதிப்பிலான 28திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன்மூலம், 1 லட்சத்து 6,803 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அரசின் முயற்சிகளால் தமிழகத்தில் 3 ஆண்டுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 31 லட்சம் பேருக்குவேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஆக.29-ம் தேதிசான்பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர் சந்திப்பில் பங்கேற்பதுடன், ஆக.31-ம் தேதி புலம் பெயர்ந்ததமிழர்களைச் சந்தித்து பேசுகிறேன். அதன்பின், செப்.2-ம் தேதி சிகாகோ செல்கிறேன். அங்கு 10 நாட்களுக்கு அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில்முதலீடு செய்து, தொழில் தொடங்கிட அழைப்பு விடுக்கிறேன்.

இதன்தொடர்ச்சியாக 'ஃபார்ச்சூன் 500' நிறுவனத்தின் தலைமைநிர்வாகிகளை சந்தித்து உரையாடுகிறேன். இவையனைத்தும் தமிழகம் தொழில்வளம் பெறவும், தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்குமான முயற்சிகளாகும். செப்.7-ம் தேதி சிகாகோவில் தமிழர்களுடனான மாபெரும் சந்திப்பு நிகழவிருக்கிறது. ஆக.27 தொடங்கி செப். 14 வரையிலான குறுகிய இடைவெளியில், தமிழகஅரசின் நிர்வாகப் பணிகள் தொய்வின்றித் தொடர, அமைச்சர்களும் அதிகாரிகளும் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும். மாநில அளவிலான பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் செப்.17-ம் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவுக்கான பணிகளை தொடங்க வேண்டும்.

முதல்வர் அயல்நாடு சென்றிருந்தாலும், தமிழகத்தில் எந்த ஒருபணியும் தடைபடாமல் நடைபெறுகிறது என்று மக்கள் தரும் சான்றிதழே திராவிட மாடல் அரசுக்கு பெருமை சேர்க்கும். அந்த நம்பிக்கையுடன் தான் பொறுப்பை உங்களுடன் பகிர்ந்து செல்கிறேன். ஆட்சிப் பணியும், கட்சிப் பணியும்தொய்வின்றித் தொடர ஒருங்கிணைப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுடன் ஒருங்கிணைந்து பணியை நிறைவேற்ற வேண்டும்.

நம்மை விமர்சிக்க விரும்புவோருக்கு நாம் நிறைவேற்றும் பயனுள்ள செயல்களே பதிலாக அமையட்டும். அமெரிக்காவில் இருந்தாலும் தமிழகம் பற்றியேதான் என் மனது சிந்திக்கும்

x