கடன் உள்ளிட்ட சேவைகளை அறிய ‘கூட்டுறவு’ எனும் புதிய செயலி: அமைச்சர் பெரியகருப்பன் அறிமுகம் செய்தார்


சென்னை: கூட்டுறவுச் சங்கங்கள் வழங்கும் சேவைகளை பொதுமக்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் அறிந்துகொள்ளும் வகையில், ‘கூட்டுறவு’ என்ற செயலியை கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் சென்னையில் நேற்று அறிமுகப்படுத்தினார்.

சென்னை, கீழ்ப்பாக்கம் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில், கூட்டுறவுத் துறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் செயலியை அறிமுகம் செய்து பேசியதாவது:

மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக தமிழ் மகள் தொடர் வைப்புத்திட்டம் மூலம் 8 லட்சத்து 19,419 சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல்வர் அறிவிப்பின்படி, கூட்டுறவு அமைப்புகள் மூலமும் தொழில்முனைவோர் மூலமும் தலா 500 எண்ணிக்கையில் மொத்தம் 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளன. இம்மருந்தகங்களுக்கு அரசு மானியமாக ரூ.3 லட்சம் வரை வழங்கப்படும்.

கூட்டுறவு வங்கிகள் மூலம் நகைக் கடனாக கிராமுக்கு ரூ.5 ஆயிரம் வரை 9 முதல் 10.50 சதவீதம் வரையிலான வட்டியில் வழங்கப்படுகிறது. இருசக்கர வாகனங்களுக்கு ரூ.2 லட்சம், 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.20 லட்சம் வரையும் 12 சதவீத வட்டியில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில், பல்வேறு வகை கூட்டுறவுச் சங்கங்கள் வழங்கும் சேவைகளை பொதுமக்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் அறிந்து கொள்ளும் வகையில், கூட்டுறவுச் சங்கங்களால் வழங்கப்படும் சேவைகள் தொகுக்கப்பட்டு, கூட்டுறவு (Kooturavu) என்ற பெயரில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இச்செயலி மூலம் பொது மக்கள் தங்களது கடன் தேவைக்கேற்ப, கடன் விண்ணப்பத்தை இணைய வழியிலேயே சமர்ப்பிக்கும் வகையில் இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பயிர்க் கடன், மீன் வளர்ப்பு கடன், கால்நடை பராமரிப்புக் கடன் மற்றும் இதர வகைக்கடன்களை செயலியில் உள்ள கடன்விண்ணப்பம் என்ற பகுதியின் மூலம்சமர்ப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இ-வாடகை எனும் பகுதியில் தேவையான வேளாண் உபகரணங்களை குறைந்த வாடகைக்கு எடுத்துபயன்படுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கிடங்கு என்ற பகுதியில், தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் கிடங்குகளின் முகவரிமற்றும் செல்போன் எண் விவரங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் விவசாய உறுப்பினர்கள் கிடங்கு வசதியை குறைந்தவாடகையில் பெற்று பயன் பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில், துறையின் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ந.சுப்பையன், கூடுதல் பதிவாளர்ப.காயத்ரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

x