ஜெயக்குமார் Vs அண்ணாமலை முதல் நடிகர் மோகன்லால் ராஜினாமா வரை: டாப் 10  விரைவுச் செய்திகள் 


அண்ணாமலை மீது ஜெயக்குமார் சரமாரி தாக்கு: “அண்ணாமலையைப் பொறுத்தவரை அவருடைய நிலைப்பாடு என்னவென்றால், அவர் ஒரு மாநிலத் தலைவரே இல்லை. அவர் பாஜக என்ற கார்ப்பரேட் கம்பெனிக்கு ஒரு மேனேஜர். இந்த மேனேஜர், முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்டத்துக்கெல்லாம் ஆடுகிறார். தேர்தல் காலத்தில், முதல்வர் ஸ்டாலின் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் ஒரு ரகசிய கூட்டணி என்று கூறியபோது, அதை எந்த காலத்திலும் அண்ணாமலை மறுக்கவில்லை. மாறாக இன்றைக்கு பாஜகவும் திமுகவும் ரகசிய கூட்டணியில் உள்ளனர்,” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

“70 வயது இபிஎஸ் பேசியது சரியா?” - அண்ணாமலை பதிலடி: “70 வயதுக்கு மேல் உள்ள தலைவர்கள் தலைக்கு ‘டை’ அடித்துவிட்டால், தங்களை இளைஞர் என்று நினைத்துக் கொள்கின்றனர். இன்றைக்கு இருக்கக் கூடிய முன்னாள் அமைச்சர்களும் தலைக்கு ‘டை’ அடித்துவிட்டால் தங்களை இளைஞராக நினைத்துக் கொள்கின்றனர். இளைஞர் என்பது ‘டை’ அடிப்பதில் இல்லை, பேச்சு, செயல், ஆற்றலில் இருக்க வேண்டும். அதனால்தான் திரும்பவும் சொல்கிறேன், என்னைப் பற்றி பேசினால், நானும் திரும்பப் பேசுவேன்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி குறித்த அவரது பேச்சுக்கு அதிமுகவினர் ஆற்றிவரும் எதிர்வினை குறித்து கேட்டதற்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

மம்தா ராஜினாமா கோரி மாணவர்கள் பேரணி: முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் கொலைக்கு பொறுப்பேற்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வலியுறுத்தி மாணவர் அமைப்பு ஒன்று அம்மாநில தலைமைச் செயலகம் நோக்கி பேரணி செவ்வாய்க்கிழமை பேரணி நடத்தியது.

இந்தப் பேரணியில் போராட்டக்காரர்கள் போலீஸாரை நோக்கி கற்களை வீசியதாலும், ஹவுரா பாலத்தில் உள்ள தடுப்புகளை உடைத்ததாலும் பரபரப்பு ஏற்பட்டது. தலைமைச் செயலகம் நோக்கி பேரணி சென்றவர்களைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைகுண்டு வீசி, தடியடி நடத்தினர்.

இந்தப் பேரணிக்கு பாஜக ஏற்பாடு செய்துள்ளதாகவும், போரட்டத்தின்போது வன்முறையைத் தூண்ட திட்டமிட்டிருப்பதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி,குற்றம்சாட்டியிருந்தது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டை மறுத்துள்ள பாஜக, இந்தப் பேரணி பாரதிய ஜனதா கட்சியால் ஏற்பாடு செய்யப்படவில்லை, என்றாலும் பேரணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.

இதனிடையே, நபன்னா அபிஜான் பேரணியில் அமைதியான முறையில் பங்கேற்றவர்கள் மீது போலீஸ் மிருகத்தனமான தாக்குதலை நிகழ்த்தியுள்ளது என்று மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், நகர நிர்வாகம் இந்த மிருகத்தனமான தாக்குதலை நிறுத்தாவிட்டால் மேற்கு வங்கத்தை முடக்குவோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அவதூறு வழக்கில் ஆஜராக விலக்கு கோரி இபிஎஸ் மனு: “எனக்கு 70 வயதாகி விட்டது. உடல்நலக் குறைவு உள்ளது. எனவே, எனது வயது, நிரந்தர குடியுரிமை, உடல் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும்,” என்று தயாநிதி மாறன் எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தொடர்ந்த அவதூறு வழக்கில் விலக்கு கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்: சென்னை - நாகர்கோவில் இடையே புதன்கிழமை தவிர்த்த வாரத்தில் 6 நாட்கள் வந்தே பாரத் ரயில் சேவை உள்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி காணொலிக்காட்சி வாயிலாக வரும் 31-ம் தொடங்கி வைக்க உள்ளார்.

8 மாதங்களில் 341 மீனவர்கள் கைது: தமிழக மீனவர்களின் ஒரு விசைப்படகை சிறைப்பிடித்து அதிலிருந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை 341 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

பாஜகவில் இணையும் சம்பாய் சோரன்: “எனது எதிர்கால அரசியல் நிலைப்பாடு குறித்து கடந்த 18-ம் தேதி விளக்கி இருந்தேன். முதலில் அரசியலில் இருந்து விலகிவிட வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால், மக்களின் ஆதரவு காரணமாக நான் அந்த முடிவை கைவிட்டேன். பாஜகவில் இணைய முடிவெடுத்துள்ளேன்” என்று ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மூத்த தலைவருமான சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.

கவிதாவுக்கு ஜாமீன் வழங்கியது ஐகோர்ட்: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளில் பாரத் ராஷ்ட்ர சமிதி மூத்த தலைவர் கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

“சத்ரபதி சிவாஜி சிலை மீண்டும் நிறுவப்படும்” -மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலை உடைந்த அதே இடத்தில் மிகப் பெரிய சிலையை மாநில அரசு நிறுவ உள்ளது என மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் தெரிவித்துள்ளார்.

நடிகர் மோகன்லால் ராஜினாமா: ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு மலையாள திரையுலகில் பாலியல் புகார் தொடர்பான சர்ச்சை வெடித்துள்ளது. இந்த சூழலில் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கமான ‘அம்மா’ அமைப்பின் தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்துள்ளார். மேலும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, “இந்த அனைத்து குற்றச்சாட்டுகளும் ஊடகங்களால் புனையப்பட்டவை. குற்றச்சாட்டுகள் வடிவில் உள்ள புகார்களுக்கும் நீதிமன்றம் தீர்வு காணும்” என நடிகரும், மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

x