“கங்கனா எங்கும் கால் பதிக்க அனுமதிக்க மாட்டோம்...” - பி.ஆர்.பாண்டியன் கொந்தளிப்பு


திருச்சி: “கங்கனாவை கட்டுப்படுத்தாவிட்டால் விவசாயிகளின் கோபத்தை கட்டுபடுத்த முடியாது. இதே நிலை தொடர்ந்தால் கங்கனா ரனாவத் இந்தியாவில் எங்கும் கால் பதிக்க அனுமதிக்க மாட்டோம்” என விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கொந்தளித்துள்ளார்.

திருச்சியில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர்.பாண்டியன் கூறும்போது, “நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் தொடர்ந்து விவசாயிகளை அவமதிக்கிறார். விவசாயிகள் போரட்டத்துக்கு வெளிநாடு சதி இருப்பதாக குற்றம் சுமத்தி உள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மத்திய பாஜக அரசு கங்கனா ரனாவத்தை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது. இதே நிலை தொடர்ந்தால் கங்கனா ரனாவத் இந்தியாவில் எங்கும் கால் பதிக்க அனுமதிக்க மாட்டோம். அவரது உருவபொம்மையை தீயிட்டு கொளுத்தும் நிலை ஏற்படும். கங்கனாவை கட்டுப்படுத்தாவிட்டால் விவசாயிகளின் கோபத்தை கட்டுபடுத்த முடியாது,” என்றார்.

கங்கனா ரனாவத் பேசியது என்ன?: முன்னதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்த நடிகை கங்கனா அதில், “மத்திய அரசின் புதிய வேளாண்மைச் சட்டத்துக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல காரணங்களுக்காக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். போராட்டம் என்ற பெயரில் நடந்த குற்றங்களை இந்த தேசம் அறியாது. விவசாயிகளின் போராட்டத்தின் போது பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்களும் நடந்தது.

பல பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்குப் பின்னர் தூக்கில் தொங்கவிடப்பட்டனர். அந்த சமயத்தில் மோடி அரசின் வலுவான நடவடிக்கை இல்லை என்றால் இந்தியாவும் வங்கதேசத்தை போல ஆகியிருக்கும். சட்டங்கள் திரும்பப் பெறப்பட்ட பின்பும் போராட்டம் தொடர்ந்ததற்கு காரணம் வெளிநாட்டு சதிகள் தான்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

x