ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் தேங்கியுள்ள சாக்கடை கழிவுகள்: பயணிகள் அவதி


ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் கிடக்கும் சாக்கடை கழிவுகள்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் கிடக்கும் சாக்கடை கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் பயணிகள் சிரமத்தில் உள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் கட்டண கழிப்பிடம், இலவச கழிப்பிடம் மற்றும் ஹோட்டல் டீக்கடை உட்பட 50-க்கும் மேற்பட்ட வணிக கடைகள் உள்ளது. பேருந்து நிலையத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தூர்வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் எழுந்து வருகிறது. மேலும் மழை பெய்தால் நீர் செல்ல வழியின்றி பேருந்து நிலையத்தில் குளம் போல் தேங்கும் சூழல் நிலவுகிறது.

பேருந்து நிலையத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை தூர்வார வேண்டும் என கடை உரிமையாளர்கள் மற்றும் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த வாரம் பெய்த லேசான மழைக்கு, பேருந்து நிலைய வளாகத்தில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து தேங்கியதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

கடந்த வாரம் பெய்த மழையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து பேருந்து நிலையத்தில் குளம் போல் தேங்கியது

கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசிய நிலையில், நகராட்சியில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் கடை உரிமையாளர்களே நேற்று முன்தினம் இரவு கால்வாயை தூர்வாரி கழிவுகளை அகற்றினர். அந்த சாக்கடை கழிவுகளை நகராட்சி பணியாளர்கள் அகற்ற வராததால் பேருந்து நிலையத்தில் கழிவுகள் தேங்கியதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

x