யானை சின்னம் விவகாரம்: விஜய் மீது தேர்தல் ஆணையத்தில் பகுஜன் சமாஜ் கட்சி புகார்!


சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் உள்ள யானை உருவத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி, தமிழக தலைமைத் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் ஆக.22ல் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் தலைவர் விஜய் கொடியை அறிமுகம் செய்தார். அக்கொடியானது சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையத்தின் சட்டம் இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆனந்தன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று பகுஜன் சமாஜ் மாநில செயலாளர் தலைமையில் தலைமை தேர்தல் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், ‘பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் சின்னமான யானை சின்னத்தை இந்தியா முழுக்க நாங்கள் கொடியிலும், தேர்தல் சின்னமாகவும் பயன்படுத்தி வருகிறோம்.

நீலக் கொடியும், யானை சின்னமும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அடையாளம். யானை சின்னமானது அம்பேத்கர் தேர்ந்தெடுத்து தேர்தலில் போட்டியிட்ட சின்னமாகும். யானை சின்னத்துக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் உணர்வுபூர்வமான வரலாற்று உறவு உள்ளது. தற்போது தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், தனது கொடியை அறிமுகம் செய்திருந்தார். அதில் எங்களின் தேசிய அங்கீகாரம் பெற்ற யானை உருவம் இடம் பெற்றுள்ளது. இதற்கு பகுஜன் சமாஜ் கட்சி தனது எதிர்ப்பை சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்தும் அது குறித்து எந்த பதிலும் நடவடிக்கையும் நடிகர் விஜய் எடுக்காமல் இருக்கிறார்.

அரசியல் நாகரீகம் இல்லாமலும், சட்ட விரோதமாகவும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியின் சின்னத்தை தனது புதிய கட்சி கொடியில் பயன்படுத்தியிருக்கும் நடிகர் விஜய் மீது தக்க நடவடிக்கை எடுத்து அவர்தம் கொடியில் உள்ள எங்கள் யானை உருவத்தை அகற்றி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருக்க வழி செய்ய வேண்டும்.” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x