வைகை ஆற்றில் மணல் கடத்தல்: 4 பேர் கைது - வாகனங்களும் பறிமுதல்


பறிமுதல் செய்யப்பட்ட லாரி.

மானாமதுரை: மானாமதுரை வைகை ஆற்றில் மணல் கடத்திய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சரக்கு வாகனம், இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் வைகை ஆற்றில் மணல் அள்ள தடை உள்ளது. ஆனால், சட்ட விரோதமாக சிலர் இரவு, பகலாக மணல் கடத்தி வருகின்றனர். இதனால் குடிநீர்த் திட்டங்கள், தடுப்பணைகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. மேலும், அப்பகுதியில் ஆறு பள்ளமாகவும், கால்வாய்கள் மேடாகவும் மாறி கண்மாய்களுக்கு தண்ணீர் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டது. ஆனாலும், மணல் கடத்தலை போலீஸார் கண்டுகொள்ளாமல் இருந்தனர்.

இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு மானாமதுரை டிஎஸ்பி-யாக நரேஷ் பொறுப்பேற்றார். அவர் தலைமையிலான போலீஸார் நேற்றிரவு வைகை ஆற்றில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்குறிச்சி பகுதியில் சரக்கு வாகனம், இருசக்கர வாகனங்களில் மணல் கடத்திய கல்குறிச்சியைச் சேர்ந்த மாயழகு (45) , ராமையா (47), ஆலங்குளத்தைச் சேர்ந்த கண்ணன் (31), கனகசபாபதி, ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து சரக்கு வாகனம், இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

x