மத்திய அரசை எதிர்த்துவிட்டு தமிழக அரசில் ஆலோசகர் நியமனம் ஏன்? - முதல்வருக்கு தலைமை செயலக சங்கம் கடிதம்


சென்னை: தமிழக அரசுத் துறைகளில் ஆலோசகர்கள் நியமனத்தை முற்றிலும் கைவிட உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, தலைமைச் செயலக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்கம் சார்பில் தலைவர் கு.வெங்கடேசன், இணை செயலாளர் ஜீவன் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதலே, அரசுத் துறைகளில் ஆலோசகர்கள் நியமனங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. தற்போது அனைத்து துறைகளிலும் புற்றீசல் போல் பெருகிவிட்டது.

கடந்த அதிமுக ஆட்சியில் இவ்வாறான நியமனங்கள் இருந்தாலும், பெரும்பாலும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளே ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால், தற்போது எந்தவரைமுறையும் இன்றி செய்யப்படுவதுடன், ஊதிய நிர்ணயத்துக்கு எந்த வழிகாட்டுதலும் பின்பற்றப்படுவதில்லை.

குறிப்பாக, தமிழகத்தில் 69சதவீதம் இடஒதுக்கீடு பின்பற்றப்படும் நிலையில், டிஎன்பிஎஸ்சி மூலம் அரசுப்பணிக்கு தேர்வாகி, பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் பணியாளர்களின் முக்கியத்துவத்தையும் திறமையையையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆலோசகர்கள் மூலம் அரசு நிர்வாகத்தை நடத்துவது ஏற்புடையதல்ல.

மத்திய அரசு, தனது பணியாளர் தேர்வாணையம் மூலம் இணைச்செயலர், துணை செயலர்,இயக்குநர் நிலையில் 45 பணியிடங்களை இடஒதுக்கீட்டை புறந்தள்ளி, சமூகநீதிக்கு எதிராக நிரப்ப முயற்சித்தபோது, தமிழக அரசு அதை எதிர்த்து குரல் கொடுத்து தடுத்து நிறுத்தியது. ஆனால், மாநில அரசில்எவ்வித சலனமுமின்றி ஆலோசகர்கள் நியமனங்களை பன்மடங்கு அதிகரித்திருப்பது திராவிட மாடலுக்கு எதிரானதாகும்.

நிபுணத்துவம் தேவைப்படும் இடங்களில் ஆலோசகர்களை நியமிப்பது என்ற நடைமுறை கைவிடப்பட்டு, ஒவ்வொரு துறைகளிலும் கணக்கிலடங்கா நியமனங்கள் சமீபகாலமாக நடைபெறுகிறது. இவ்வாறு நியமிக்கப்படும் ஆலோசகர்கள், சமூகநீதிக்கு எதிராக செயல்படுவதற்கான பயிற்சி பெற்று, பல்வேறு முதலாளித்துவ நிறுவனங்கள் மூலம் பல்வேறு வழிகளில் மாநில அரசில் உட்புகுவது என்பதுமிகவும் அபாயகரமானதாகும்.

தற்போது தமிழக அரசில் 3.5 லட்சத்துக்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், இப்போக்கு நீடித்தால், இளைய சமூகத்தின் அரசு வேலை என்ற கனவை சீரழித்துவிடும்.

எனவே, திராவிட மாடல் ஆட்சியில் 69 சதவீதம் இடஒதுக்கீட்டையும், சமூக நீதியையும் காக்கும் பணியில் சமரசம் ஏதுமின்றி பணியாற்றி வரும் தமிழக முதல்வர், ஆலோசகர் நியமனங்களை முற்றிலும் கைவிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

x