தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்பவர்களின் வசதிக்காக 10,975 பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில் எங்கிருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்ற விவரத்தை தெரிஞ்சுக்கோங்க. ஊருக்கு செல்கிற நிலையில், கடைசி நேர பரபரப்பைத் தவிர்த்திடுங்க.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை, சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,675 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 10,975 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 5,920 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,895 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, நவம்பர் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 3,167 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 9,467 பேருந்துகள், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,825 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 13,292 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மயிலாடுதுறை, அரியலூர், நாகை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.கே.கே நகரில் இருந்து இசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், செல்லும் பேருந்துகளும், தாம்பரத்தில் இருந்து திண்டிவனம், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படும்.
பூந்தமல்லியில் இருந்து காஞ்சிபுரம், வேலூர், ஆரணி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்யும் பொருட்டு முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான tnstc official app மற்றும் http://www.tnstc.in போன்ற இணையதளங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை (24×7) மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.