துரைமுருகன் குறித்து தான் பேச முடியாததை ரஜினி மூலமாக பேச வைத்துள்ளார் முதல்வர்: கே.பி.முனுசாமி விமர்சனம்


கே.பி.முனுசாமி

கிருஷ்ணகிரி: அமைச்சர் துரைமுருகன் குறித்து, தான் பேசமுடியாததை ரஜினி மூலமாக முதல்வர் ஸ்டாலின் பேச வைத்துள்ளார் என அதிமுக முன்னாள் அமைச்சரும் துணை பொதுச் செயலாளருமான கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெறவுள்ளன. அவர் மக்களைச் சந்திக்காமல் ஊடகம், பத்திரிகையாளர்களைச் சந்தித்து அரசியல் நடத்துகிறார். வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக 4-ம் இடத்துக்கு செல்லும் என பேசுகிறார். ஆனால்,வரும் தேர்தலிலும் திமுக – அதிமுக இடையே மட்டுமேபோட்டி இருக்கும். அதில் வெற்றிபெற்று பழனிசாமி முதல்வரா வார்.

திராவிட கட்சிகளை ஒழிப்போம் என அண்ணாமலை பேசுகிறார். ஆனால் கடந்த 1967-ம் ஆண்டு முதல் திராவிட கட்சிகள் தான் தமிழகத்தை ஆள்கின்றன என்பது அவருக்கு புரியவில்லை. பாஜக ஆளும் மாநிலங்களைவிட திராவிட கட்சிகள் ஆளும் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முதலிடத்தில் உள்ளது.

ரஜினி, தான் பங்கேற்கும் நிகழ்ச்சியில் சிலரை சந்தோஷப்படுத்த கருத்துகளைக் கூறுவார்.அதுபோலதான் கருணாநிதி புத்தக வெளியீட்டு விழாவிலும்பேசியுள்ளார். திமுக மூத்தநிர்வாகியும், இரண்டாம் நிலை தலைவருமான துரைமுருகனை விமர்சித்து ரஜினி பேசுவதைக் கேட்டு, மேடையில் இருந்த முதல்வர் ஸ்டாலின், உதயநிதி உட்பட அனைவரும் மகிழ்ந்து சிரிக்கிறார்கள்.

துரைமுருகன் குறித்து, தான் பேசமுடியாததை ரஜினிகாந்தை வைத்து முதல்வர் ஸ்டாலின் பேச வைத்துள்ளார் என்பதைத் தான் இது காட்டுகிறது.

தனியார் பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் விவகாரம் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பெரும் அவமானம். தனியார் பள்ளிகளில் போலி என்சிசி முகாம் நடந்தபோது, மாவட்டக் கல்வி அலுவலர்கள் என்ன செய்தார்கள்?

இவ்வாறு அவர் தெரிவித்தார்

x