சிவாஜிக்கு ஒரு நியாயம், வானதிக்கு ஒரு நியாயமா? - கொதிக்கும் திமுகவினர்


வானதி சீனிவாசன் எம்எல்ஏ

திமுகவினர் குறித்து அவதூறாக பேசியதாக கோவை பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மீது திமுக வழக்கறிஞர்கள் அணியினர் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

கோவையில் கடந்த 29-ம் தேதியன்று பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய வானதி சீனிவாசன் "திராவிட முன்னேற்ற கழகத்தோட எம்.எல்.ஏ, கவுன்சிலர் போன்றவர்கள் ஒரு வீட்டுல இருக்க மாட்டாங்க. திமுககாரங்க ஒரு பண்பாடு வெச்சிருக்காங்க. காலையில் ஒரு வீட்டுல இருப்பாங்க. சாயங்காலம் ஒரு வீட்டுல இருப்பாங்க. அது அந்த கட்சியோட ஜீன்" என்று பேசினார்.

இந்த பேச்சு சமூக வலைதளங்கள் மூலமாக வைரலாக பரவிய நிலையில் இதை கேட்ட திமுகவினர் கொதித்துப் போயுள்ளனர். பாஜகவில் உள்ள பெண்கள் குறித்து திமுகவின் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசியதாக புகார்கள் எழுந்த நிலையில் அவரை உடனடியாக கட்சியை விட்டு திமுக நீக்கியது. அத்துடன் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் திமுகவினரை அவதூறாக பேசிய வானதி சீனிவாசன் மீது அந்த கட்சி எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என்று திமுகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன் வானதி சீனிவாசனின் அவதூறு பேச்சை கண்டித்து திமுக வழக்கறிஞர்கள் அணியினர் ரேஸ்கோர்ஸ் போலீஸில் நேற்று புகார் அளித்தனர். கோவை மாவட்டம் முழுவதும் திமுக பகுதி நிர்வாகிகள் அந்தந்த காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளனர்.

இந்த விவகாரத்தை திமுகவினர் கையில் எடுத்து அரசியல் செய்யத் தொடங்கியுள்ளதால் பாஜகவினருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

x