ரஜினி Vs துரைமுருகன் சலசலப்பு முதல் ஹிஸ்புல்லா - இஸ்ரேல் மோதல் வரை: டாப் 10 விரைவுச் செய்திகள்


ரஜினிகாந்த் Vs துரைமுருகன் - பேசியது என்ன? - சமீபத்தில் அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் “திமுகவில் ஏகப்பட்ட பழைய மாணவர்கள் இருக்கிறார்கள். அதுவும் அவர்கள் சாதாரண மாணவர்களும் கிடையாது. அசாதாரணமானவர்கள். அனைவரும் நல்ல 'ரேங்க்' வாங்கியவர்கள். ஆனாலும், வகுப்பறையை விட்டுச் செல்ல மாட்டேன் என்று அமர்ந்துள்ளார்கள். கருணாநிதியுடன் இருந்தவர்களை சிறு வயதில் இருந்து பார்த்து வந்துவிட்டு, அவர்களை சமாளிப்பது என்பது சாதாரண விஷயமா? அதுவும், துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். அவர் கருணாநிதி கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர்” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

இது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், “மூத்த நடிகர்கள் எல்லாம் வயதாகி, பல் விழுந்து, தாடி வளர்த்த நிலையில் கூட நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை” என தனக்கே உரிய பாணியில் பதிலடி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

சர்ச்சைக்கு ரஜினி, துரைமுருகன் முற்றுப்புள்ளி: “எங்கள் நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம். நாங்கள் எப்போதும்போல் நண்பர்களாகவே இருப்போம்” என்று கூறி ரஜினி பேச்சு தொடர்பான சர்ச்சைகளுக்கு அமைச்சர் துரைமுருகன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதனிடையே நடிகர் ரஜினிகாந்த், “துரைமுருகன் மிகப் பெரிய தலைவர். என் நீண்டகால நண்பர். அவர் என்ன சொன்னாலும் எனக்குக் கவலையில்லை. எங்கள் நட்பு நீடிக்கும்” என்றார்.

“துரைமுருகனுக்கு அங்கீகாரம் இல்லை!” - தமிழிசை: ரஜினிகாந்த், துரைமுருகன் இருவரும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், இந்த விவகாரம் அடங்குவதாக இல்லை. “மேடையில் துரைமுருகன் குறித்து பேசி, ரஜினிகாந்த் திமுகவில் புயலை உருவாக்கியிருக்கிறார். மூத்த அரசியல்வாதியான துரைமுருகன், மாணவராக இருந்திருக்க முடியாது. கண்டிப்பாக ஆசிரியராக தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால்தான் வாரிசு அரசியலை வேண்டாம் என்கிறோம். கட்சிக்காக உழைக்கும் திமுக தொண்டர்கள் இதை சிந்திக்க வேண்டும்” என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

ஸ்டாலின் மீது அதிமுக விமர்சனம்: இதனிடையே, “திமுகவில் உள்ள சீனியர்களை வெளியேற்ற முடியாததால் ரஜினிகாந்தை வைத்து தமிழக முதல்வர் ஸ்டாலின், அவர்களை அசிங்கப்படுத்துகிறார்” என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், “அனுபவமும், கட்சிக்கு விசுவாசமாகவும் உள்ள துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், திமுக தலைமைக்கு யோசனை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு தேவை - சிராக் பாஸ்வான்: “நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்பதில் எங்களது லோக் ஜன சக்தி உறுதியாக உள்ளது” என்று மத்திய அமைச்சரும், லோக் ஜன சக்தி கட்சியின் ராம் விலாஸ் அணி தலைவருமான சிராக் பஸ்வான் வலியுறுத்தியுள்ளார்.

லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள்! -“லடாக்கில் ஜன்ஸ்கர், ட்ராஸ், ஷாம், நுப்ரா, சங்தங் ஆகிய 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. லடாக் மக்களுக்கு பல்வேறு வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருவதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

கங்கனாவுக்கு பஞ்சாப் மாநில பாஜக கண்டனம்: விவசாயிகள் போராட்டத்தை தடுக்க தேசத்தின் தலைமை, வலுவான நடவடிக்கையை எடுக்காமல் போயிருந்தால் பஞ்சாப் மாநிலத்தை வங்கதேசமாக மாற்றி இருப்பார்கள் என பாஜக எம்.பி கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்திருந்தார். அவரது இந்த சர்ச்சை கருத்துக்கு பஞ்சாப் மாநில பாஜகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான ஹர்ஜித் கரேவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் கீவ் நகரில் ரஷ்யா சரமாரி தாக்குதல்: உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய சரமாரியாகத் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேற்கு லுட்ஸ்க், கிழக்கு டினிப்ரோ மற்றும் தெற்கு சபோரிஜியா பகுதிகளில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

டெலிகிராம் சிஇஓ கைது: பிரான்ஸ் மீது விமர்சனம்: டெலிகிராம் செயலியின் சிஇஓ பாவெல் துரோவ், கடந்த சனிக்கிழமை அன்று பிரான்ஸ் நாட்டு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கருத்து சுதந்திரத்தை பிரான்ஸ் நசுக்க முயற்சிப்பதாக டெக் துறையை சார்ந்து இயங்கி வரும் ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே முற்றும் மோதல்: இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பு இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. இது உலக அளவில் பதற்றத்தை உருவாக்கி உள்ளது. இந்நிலையில், லெபனான் மீதான தாக்குதல் தங்கள் தேசத்தை தற்காத்துக் கொள்வதற்கான உரிமை என இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சோக் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் ராணுவத் தளங்களைக் குறிவைத்து சுமார் 300-க்கும் மேற்பட்ட கணைகளை ஏவி தாக்குதல் மேற்கொண்டதாக ஹிஸ்புல்லா அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இஸ்ரேல் தரப்பிலும் லெபனான் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது.

லெபனானின் தெற்கு எல்லையில் இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் கடும் தாக்குதல் நடத்தியதை அடுத்து, பதற்றத்தை உடனடியாக தடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

x