காங்கயம்: வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு கண்காணிப்புக் குழு கூட்டங்களை தமிழகம் முழுக்க நடத்தப்பட வேண்டும் என, தலித் விடுதலை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ச.கருப்பையா இன்று (ஆக. 26) அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: "தமிழ்நாட்டில் பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகளால் தலித் தலைவர்கள் படுகொலைகளும், தலித் பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறைகளும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்களில் காவல்துறை குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதோடு, பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீதும் வழக்குகளைப் பதிவு செய்கின்றனர்.
1989ம் ஆண்டு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் தடுப்பு சட்டம், மற்றும் 2015ம் ஆண்டின் புதிய திருத்தங்கள் ஆகியன தமிழ்நாட்டில் முறையாக நடைமுறைப்படுத்தாததால், சட்ட விதிமுறைகளுக்கு எதிரான செயல்பாடுகள் தான் காணப்படுகிறது. மாநில அளவிலான விழிப்புணர்வு கண்காணிப்புக்குழு 2024ம் ஆண்டு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் கூட்டப்பட வேண்டும்.
ஆனால், இன்று வரை மேற்கண்ட 2 கூட்டங்களும் கூட்டப்படவில்லை. அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆண்டுக்கு 4 முறை எஸ்சி, எஸ்டி வன்கொடுமைகள் தடுப்பு சட்ட வழக்குகள், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.
2024ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், தற்போதைய ஆகஸ்ட் மாதம் வரை, அனைத்து மாவட்டங்களிலும் எந்தக் கூட்டங்களும் நடத்தப்படவில்லை. அதேபோல, பல வருவாய் கோட்டங்களில், கோட்ட அளவிலான விழிப்புணர்வு கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்படவில்லை. முறையான ஆய்வுக் கூட்டமும் நடத்தப்படவில்லை.
2019ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை மட்டும் தமிழ்நாட்டில் 1,151 கொலை, பாலியல் வன்கொடுமை மற்றும் தீக்குளிப்பு ஆகிய சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டின் நிவாரணம் ரூ.35 கோடியே 24 லட்சம் இன்னும் வழங்கப்படாமல் மறுக்கப்பட்டுள்ளது. எனவே, முதல்வர் இப்பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு மாநில, மாவட்ட மற்றும் கோட்ட அளவிலான விழிப்புணர் கண்காணிப்புக் குழு கூட்டங்கள் முறையாக கூட்டப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், பல்வேறு வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பட்டியல் மற்றும் பழங்குடியினர் மக்களின் மறுவாழ்வு பணிகள் குறித்து ஆய்வுகள் செய்வதோடு, அவற்றை முறையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.