‘என் வழி... நேதாஜி வழி..’ ரஞ்சனா நாச்சியார் அதிரடி!


ரஞ்சனா நாச்சியார்

படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை அடித்ததாக கைது செய்யப்பட்ட ரஞ்சனா நாச்சியார், நேதாஜி வழி தான் தங்கள் பாதை என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.

கைது செய்யப்பட்ட ரஞ்சனா நாச்சியார்

காஞ்சிபுரம் மாவட்டம் கெருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரஞ்சனா நாச்சியார். பாஜகவில் கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளராக இருக்கிறார். போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் நேற்று முன்தினம் மாணவர்கள் சிலர் தொங்கியபடி சென்றதைக் கண்ட இவர், பேருந்தை நிறுத்தி ஓட்டுநரையும், நடத்துநரையும் கடுமையாக கண்டித்துப் பேசினார். அத்துடன் படிக்கட்டில் தொங்கியவர்களை இறங்கிச் செல்லுமாறு ஆவேசமாக எச்சரித்தார். இறங்க யோசித்த சிலரை தாக்கினார். ஒருமையில் பேசியதோடு, அவர்களை அடிக்கவும் செய்தார்.

இது தொடர்பான வீடியோ பதிவு சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. ரஞ்சனா நாச்சியாரை யார் என்று அடையாளம் தெரியாத நிலையில், பலரும் அவரை ‘வீரப் பெண்மணி’ என்று தங்களது பதிவுகளில் வர்ணித்தனர். மேலும் அவரது செயலை நியாயப்படுத்தினர். வேறு சிலர், ‘அவருடைய கோபம் சரிதான்.. ஆனால் சட்டத்தை கையில் எடுத்து மாணவர்களை எப்படித் தாக்கலாம்?’ என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.

மாணவர்களை அடித்து கீழே இறக்கியது பாஜக பெண் நிர்வாகி என்று தெரியவந்ததும், சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் பரவின. இந்நிலையில், பேருந்து சென்ற வழித்தடம் மற்றும் ரஞ்சனா நாச்சியாரின் இருப்பிடத்தை போலீஸார் கண்டறிந்தனர். அவரது வீட்டுக்கே சென்று கைது செய்தனர்.

அரசுப் பேருந்தை வழிமறித்தல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் ரஞ்சனா நாச்சியார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை போலீஸ் பாதுகாப்புடன் ஸ்ரீபெரும்புதூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவர் ராம்குமார் முன்பு போலீஸார் நேற்று ஆஜர்படுத்தினர்.

’பேருந்தில் ஆபத்தான முறையில் பயணித்த மாணவர்களை தாய் உள்ளத்தோடும், சமூக அக்கறையுடனும் ரஞ்சனா நாச்சியார் கண்டித்துள்ளார். யாரையும் துன்புறுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன் அவர் செயல்படவில்லை. இவரை தண்டித்தால் சமூக செயல்பாட்டாளர்கள் சமூகப் பணியை மேற்கொள்வதற்கு தயக்கம் காட்டுவார்கள். எனவே இவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும்’ என நாச்சியார் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் முறையிட்டனர்.

இதற்கு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராம்குமார் ரஞ்சனா நாச்சியாருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி அவர் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் மாங்காடு காவல் நிலையத்தில் 40 நாட்கள் கையெழுத்து இடவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சனா நாச்சியார், "பேருந்தில் மாணவர்கள் தொங்கியபடி செல்வதை பலரும் பார்க்கின்றனர். ஆனால் அவர்கள் எதுவும் சொல்வதில்லை. மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு நான் அவ்வாறு செய்தேன். எங்கள் குடும்பம் காந்தி வழியை பின்பற்றுவதில்லை. நாங்கள் நேதாஜியின் வழியை பின்பற்றி நடக்கிறோம்" என்று ரஞ்சனா நாச்சியார் தெரிவித்தார்.

x