மதங்களுக்கு இடையே வன்முறையை தூண்டிவிடுவதே திமுகவின் வேலை; ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் காட்டம்!


சி.பி.ராதாகிருஷ்ணன்

பாஜகவின் மூத்த தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணன் தற்போது ஜார்கண்ட் மாநில ஆளுநராக இருக்கிறார். பொது நிகழ்ச்சிகளுக்காக அடிக்கடி தமிழகம் வந்துபோகும் அவர், அரசியலும் பேசுகிறார். அண்மையில் கேரளாவில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக கருத்துத் தெரிவித்திருந்த அவர், “கிறித்தவ வழிபாட்டுக் கூடத்தில் கிறித்தவர் ஒருவரே குண்டு வைத்தார் என்று சொல்வது நம்பும் படியாகவா இருக்கிறது?” என்று சொன்னது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கேரளா குண்டு வெடிப்பு, தமிழக அரசியல் களம், திமுக அரசின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல கேள்விகளுடன் அவரை தொடர்பு கொண்டோம். இனி அவரது பேட்டி...

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுடன் சி.பி.ராதாகிருஷ்ணன்

இங்கே பாஜகவின் பிரதான முகமாக இருந்துவிட்டு ஜார்கண்டில் ஆளுநராக அமர்ந்திருப்பதை எப்படி உணர்கிறீர்கள்?

தமிழக மக்களுக்காக பணியாற்றியதின் விளைவாக கொடுக்கப்பட்ட மிகப்பெரிய பொறுப்பு ஆளுநர் பதவி என நினைக்கிறேன். பொறுப்பும் கூடி இருக்கிறது. ஜார்கண்ட் மாநில ஆளுநராக பொறுப்பேற்றதிலிருந்து அந்த எளிய மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களின் முன்னேற்றத்திற்கு என்னால் இயன்ற பங்களிப்பை செலுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். மாநில அரசோடு இணைந்து எளிய மக்களின் வாழ்வியல் மாற்றத்திற்கு தூண்டுகோலாக இருக்க வேண்டும் என்பது எனது எண்ணமாக இருக்கிறது.

கேரள பாஜக பொறுப்பாளராகவும் முன்பு அங்கு இருந்தீர்கள். அங்கு நிகழ்ந்திருக்கும் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

நிச்சயமாக ஒரு கிறித்தவர், தனது கிறித்தவ வழிபாட்டுக் கூட்டத்தில் வெடிகுண்டுகளை வைத்து வெடிக்கச் செய்திருப்பார் என்பதை நம்ப முடியவில்லை. அதுவும் அவர் யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்ததாகக் கூறுகிறார். அதுவும் நம்பும்படியாக இல்லை. இதன் பின்னணியில் யாரோ இருக்கிறார்கள். அவர்களை கண்டறிய வேண்டும்.

கேரளா அரசு முனைப்புடன் செயல்பட்டு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், என்ஐஏ இதில் தலையிட்டு முழுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும்.

சி.பி.ராதாகிருஷ்ணன்

தமிழக விவகாரங்களில் பிற மாநில ஆளுநர்கள் மூக்கை நுழைப்பது சரியில்லை என்கிறதே திமுக?

ஆளுநர்கள் அரசியல் பேசக்கூடாது என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. நிச்சயமாக நானும் அதனை வரவேற்கிறேன். ஆனால், தவறு நடக்கும் பொழுது அதனை சுட்டிக்காட்டு வதற்கான உரிமை, கடமை தமிழக பிரஜையாக எனக்கும் உள்ளது எல்லோருக்கும் உள்ளது. தவறு யார் செய்தாலும் தவறுதானே அதனை சுட்டிக்காட்டும் போது திருத்திக் கொள்ள வேண்டுமே தவிர நீங்கள் கருத்துக்கூறக்கூடாது என்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது.

முதல்வர் ஸ்டாலின்

திமுக அரசின் செயல்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள்?

ஒரு அரசை விமர்சிக்கக் கூடாது என்று நினைப்பவன் நான். அதே நேரத்தில் அந்த அரசு பொறுப்பாகவும் தங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு உண்மையாகவும் இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. அதிலிருந்து தவறும் போது அதனை சுட்டிக்காட்டுகிறோம். மதவாத எதிர்ப்பு என கூறி மதங்களுக்கு இடையே வன்முறையே தூண்டி விடுவதே திமுகவின் வேலையாக இருக்கிறது.

கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொல்லப்பட்டார்கள். அந்தச் செயலில் ஈடுபட்ட நபர்களை விடுவிக்க வேண்டும் என இந்த அரசு நினைப்பது சரியான போக்கா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் ஊக்குவிப்பதை எந்த வகையிலும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கோவையில் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே குண்டுவெடிப்பு நடந்த போது அதனை சிலிண்டர் வெடிப்பு என மாற்றி பேசினார்கள். நாங்கள் மதசார்பற்றவர்கள் என பேசி மதங்களுக்கு இடையே வெறுப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் இவர்களுடைய செயல்பாடுகள் இருக்கிறது.

கேரளமும், தமிழகமும் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் பல்வேறு கட்டங்களிலே ஆபத்தை எதிர்கொண்டு இருக்கிறது. பல உயிர்களை இழந்திருக்கிறது. ஆனால், துரதிருஷ்டவசமாக இரண்டு மாநில அரசுகளும், பயங்கரவாதத்தை ஆதரிப்பதுதான் இஸ்லாத்தை ஆதரிப்பது என நினைத்துக் கொண்டிருக்கின்றன.

கேரளாவில் இருக்கும் கம்யூனிஸ்ட் அரசாங்கமும் சரி, தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசாங்கமும் சரி, வெடிகுண்டுகளை வைப்பவர்களையும், கொலைகார்களையும் பாதுகாக்கும் அரசுகளாக இருக்கின்றன. இதனால்தான் இதுபோன்ற வன்முறைகளை கட்டுப்படுத்த முடிவதில்லை. அதனால் தான் வன்முறைகள் இன்றைக்கு ஆளுநர் மாளிகை வரை நீண்டுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் நிறைவேற்றிக் கொடுக்கும் மசோதாக்களை ஆளுநர்கள் கிடப்பில் போடுவது சரிதானா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பொறுப்புணர்வோடு நிறைவேற்றப்படும் மசோதாக்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு உகந்ததாக உள்ளதா என்பதை ஆராய வேண்டிய கடமை ஆளுநர்களுக்கு உள்ளது. அதன்படி ஆராய்ந்து அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தான் ஆளுநர் பணியாக இருக்க முடியும். அரசமைப்பு சட்டத்திற்கு மாறாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால் அதற்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதில்லை.

சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கக் கூட தமிழக ஆளுநர் மறுக்கிறாரே..?

சங்கரய்யா தமிழகத்தின் மூத்த தலைவர். அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க தமிழக ஆளுநர் ஏன் அனுமதி மறுக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. அவரை சந்திக்கும் போது நிச்சயமாக என்ன காரணம் என கேட்டுச் சொல்கிறேன்.

அண்ணாமலையின் தலைமையின் கீழ் தமிழக பாஜகவின் வளர்ச்சி எப்படி உள்ளது?

தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. முன்பை விட தமிழக பாஜக தொண்டர்களிடம் எழுச்சியைப் பார்க்க முடிகிறது. ஆளும் கட்சியான திமுகவுடன் மல்லுக்கும் நிற்கும் ஒரே எதிர்கட்சியாக பாஜக வளர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

அண்ணாமலை இபிஎஸ்

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஏற்கெனவே நான் சொன்னது போலத்தான் ஆளுநர்கள் அரசியல், கூட்டணி குறித்தெல்லாம் பேசக் கூடாது என்பது விதி. அதனால் இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலையும், பாஜக அகில இந்திய தலைமையும் தான் முடிவு செய்ய முடியும்.

x