மதுரை கோரிப்பாளையம் மேம்பாலத்துக்கு வைகை ஆற்றில் பிரம்மாண்ட தூண் அமைக்கும் பணி தொடக்கம்!


படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் மேம்பாலம் கட்டுமானப் பணியில் வைகை ஆற்றில் மேம்பாலத்தை தூக்கி நிறுத்தும் வகையில் பிரம்மாண்ட தூண் அமைக்கும் பணி இன்று தொடங்கியது.

மதுரை மாநகரின் இதயப் பகுதியான கோரிப்பாளையம் பகுதியானது கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசலை எதிர்க்கொண்டு வருகிறது. இப்பகுதியில் அரசு மருத்துவமனை சாலை, செல்லூர் பாலம் ஸ்டேஷன் சாலை, தல்லாகுளம் சாலை, சிம்மக்கல் சாலை மற்றும் ஆழ்வாரம்புரம் செல்லக்கூடிய சாலை போன்றவை சந்திக்கிறது. அதனால், காலை முதல் இரவு வரை இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இப்பகுதியில் நீடிக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ரூ.190 கோடியில் மேம்பாலம் கட்டப்படுகிறது.

இந்த மேம்பாலம் தமுக்கம் மைதானத்துக்கு முன்னதாகத் தொடங்கி கோரிப்பாளையம் வழியாக ஏ.வி மேம்பாலத்திற்கு இணையாக மீனாட்சி கல்லூரி வழியாக சிம்மக்கல் வரை 2 கி.மீ., தொலைவிற்கு செல்கிறது. இந்த பாலத்தில் செல்லூரை நோக்கிச் செல்லும் பாலம் ஸ்டேஷன் சாலையில் மட்டும் ஒரு இணைப்புப் பாலம் கட்டப்படுகிறது. இந்த இணைப்புப் பாலத்திற்கான பிரம்மாண்ட தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இனி, இணைப்பு பாலம்தான் அமைக்க வேண்டும்.

தற்போது அடுத்தக் கட்டமாக தல்லாகுளத்தில் இருந்து ஏ.வி மேம்பாலத்திற்கு இணையாக மற்றொரு பாலம், மீனாட்சி கல்லூரியை ஓட்டி வைகை ஆறு வழியாக சிம்மக்கல் வரை அமைக்கப்படுகிறது. இந்தப் பாலத்தை கட்டுவதற்காக அதனை தாங்கி தூக்கிப்பிடிக்கும் வகையில் வைகை ஆற்றுக்குள் பிரம்மாண்ட தூண்கள் அமைக்கப்படுகிறது. இந்த தூண்கள் அமைப்பதற்கான பணிகள் இன்று முதல் தொடங்கியது.

இதற்காக ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் வைகை ஆற்றில் தூண்கள் அமைக்கப்படுகிறது. தூண்கள் அமைக்கப்பட்ட பிறகு மேம்பாலம் அமைக்கப்படும். கோரிப்பாளையம் மேம்பாலம் அமைக்கும் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருவதால் மதுரை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

x