தமிழகம் முழுவதும் கல் குவாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கட்டுமான தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. அது ஆளும் திமுக அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளது. இன்னொரு பக்கம் அமைச்சர் நேரு தன்னை அழிக்கப்பார்க்கிறார் என்று திமுக எம்எல்ஏ ஒருவர் பேசியிருக்கும் ஆடியோ ஒன்று வெளியாகி திமுக வுக்கு தலையிடியைக் கொடுத்திருக்கிறது. அரசுக்கும், கட்சிக்கும் நெருக்கடியைத் தந்திருக்கும் இந்த இரண்டுக்கும் காரணகர்த்தாவாக இருப்பவர் ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி!
கரூர் மாவட்டம் தோகைமலை பகுதியில் பழனியாண்டி நடத்திவரும் குவாரில் விதிகள் மீறப்பட்டதாகச் சொல்லி 23 கோடி ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது வருவாய்த்துறை. இதையடுத்தே கல் குவாரி உரிமையாளர்கள் போராட்டமும், அமைச்சர் நேருவுக்கு எதிரான பழனியாண்டியின் விமர்சனமும் வெடித்திருக்கிறது. "என் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியால் நேருதான் இப்படிச் செய்கிறார்" என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார் பழனியாண்டி.
பழனியாண்டி பேசியதாக வெளியாகி இருக்கும் அந்த ஆடியோவில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதில் சொல்லி இருக்கும் பழனியாண்டி, “நான் அந்த கல்குவாரி மூலம் 250 கோடி சம்பாதித்து இருந்தால்தான் 23 கோடி அபராதம் போட முடியும். அது தவறு என்பதால்தான் பசுமைத் தீர்ப்பாயம் 'சரியாக விசாரித்து அறிக்கை கொடுங்கள்' என்று சொல்லி இருக்கிறது. அங்கே விதிமீறல் நடந்து 50 அடி அதிகமாக கல் எடுத்திருப்பது உண்மைதான். அதற்கு ஃபைன் போட்டால் 50 லட்சம் ரூபாய்தான் போட முடியும். ஆனால் 23 கோடி ரூபாய் அபராதம் போட்டிருக்கிறார்கள்.
நேருவின் தொல்லை தாங்க முடியாமல்தான் கரூர் மாவட்டத்தில் குவாரி எடுத்தேன். அங்கேயும் என்னை வாழவிடாமல் செய்கிறார். நேரு ரெட்டியார். வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ரெட்டியாரிடம் சொல்லி, எனக்கு இப்படி ஃபைன் போடச் சொல்லி இருக்கிறார். போன திமுக ஆட்சியில் என்னை குடும்பத்தோடு கொலை வழக்கில் சிக்க வைத்தார். இம்முறை குவாரி வழக்கில் சிக்க வைத்திருக்கிறார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது என் குவாரியில் யாரும் நுழையமாட்டார்கள். ஆளுங்கட்சியானதும் தான் என் மீது வழக்குப் போடுகிறார்கள்” என்று ஆதங்கத்தைக் கொட்டியிருக்கிறார்.
அமைச்சர் நேருவின் ஆதரவாளர்தான் பழனியாண்டியும். அண்மையில் திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்ட விவகாரத்திலும் கூட பழனியாண்டியும் நேருவுக்காக களத்தில் முன் நின்றார். இப்படி எல்லா விவகாரத்திலும் நேருவுடன் தான் அவரும் நிற்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுகவுக்கு வலுவான தொகுதியாயிற்றே, அங்கு யாரை நிறுத்துவது என்று கேள்வி எழுந்தது. அப்போது, “ நான் இருக்கிறேன்” என்று பழனியாண்டி முன் வந்தார்.
“உனக்கு சீட்டு கொடுத்தால் நீ ஜெயிப்பாயா?” என்று ஸ்டாலின் கேட்டபோது, “ஜெயிக்கலைனா நான் கட்சிக்குள்ளேயே வரமாட்டேன்” என்று உறுதியாகச் சொல்லி சீட்டை வாங்கினார். அவரது விசுவாசத்தை அறிந்த நேருவும் அவருக்கு பரிந்துரை செய்தார். சொன்னபடியே பழனியாண்டி ஜெயித்தும் காட்டினார்.
அப்படிப்பட்டவர் தற்போது நேருவுக்கு எதிராகப் புலம்பியிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. குவாரி தொழிலில் தற்போது பழனியாண்டி மிக வேகமாக வளர்ந்து வருகிறார். அவருக்கு, மேலிட செல்வாக்கு பெற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது உதவி வருகிறார். செந்தில் பாலாஜியின் உதவியால்தான் கரூரில் அய்யர்மலை, தோகைமலை ஆகிய இடங்களில் புதிய குவாரிகளை வாங்கியிருக்கிறார் பழனியாண்டி. இதனால் செந்தில் பாலாஜியின் ஆதரவாளராக பழனியாண்டி மாறி வருகிறார்.
போனில் செய்தியாளரிடம் தனது மனக்குமுறலைக் கொட்டும்போது, கடந்த திமுக ஆட்சியில் ( 2007 ஜனவரி 22) திருச்சி கிராப்பட்டியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் துரைராஜ் காருடன் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தன்னை தொடர்புபடுத்தியதாகக் கூறியுள்ள பழனியாண்டி, அதற்குமுன் சோமரசம்பேட்டைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் புருஷோத்தமன் கொலை வழக்கில் தன் பெயரை இழுத்துவிட்டதிலும்கூட இப்படிப்பட்ட அரசியல் காரணங்கள்தான் இருந்தது என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
வெளிப்படையாக இப்படி பேசி பிரச்சினையை கிளப்பிய பழனியாண்டி, இன்னொருபக்கம் சத்தமில்லாமல் குவாரி உரிமையாளர்களையும் ஒன்றிணைத்திருக்கிறார். அதன் விளைவாகவே அவருக்கு ஆதரவாக தமிழ்நாடு குவாரி உரிமையாளர்கள் இப்படி விதிக்கப்படும் கூடுதல் அபராதம் உள்ளிட்டவற்றை எதிர்த்து வேலைநிறுத்தத்தை தொடங்கி இருக்கிறார்கள். இதனால் கட்டுமான தொழிலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து குவாரி விவகாரத்தில் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தலையிட்டுள்ளது. ”குளித்தலை பகுதியில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி செயல்பட்டு வரும் கல்குவாரிகள் குறித்து மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையமும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து தாக்கல் செய்திருக்கும் அறிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை. வாரிய விதிகளை மீறியது குறித்தும் அதற்காக விதிக்கப்பட்ட அபராதம் குறித்தும் அறிக்கையில் குறிப்பிடவில்லை. குத்தகை எடுத்து சுற்றுச்சூழல் அனுமதி பெற்று நடத்துகின்றனரா... அது எவ்வளவு காலத்திற்கு செல்லுபடியாகும்... அனுமதி பெற்றதை விட அதிகமாக கற்களை வெட்டி எடுத்திருந்தால் சுற்றுச்சூழல் இழப்பீடு விதிக்கப்பட்டதா? என்பது போன்ற விவரங்களுடன் ஜூலை 25-ம் தேதிக்குள் புதிய அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்" என்று தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே கடந்த 27-ம் தேதி பழனியாண்டியை சென்னைக்கு அழைத்த திமுக தலைமை அவரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளது. தன் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொன்ன அவருக்கு, “இதுகுறித்து பொதுவெளியில் இனி எதையும் பேசக்கூடாது” என்று வாய்ப்பூட்டுப் போட்டு அனுப்பி இருக்கிறதாம் தலைமை. இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்க பழனியாண்டியை அலைபேசியில் அழைத்தபோது, தான் சென்னையில் இருப்பதாகவும், இதுகுறித்து இப்போது பேச முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
பழனியாண்டியின் பகீர் குற்றச்சாடுகள் தொடர்பாக நமக்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, “கட்சியினரையும், சுற்றி இருக்கிற நாலு பேரையும் வளர்த்துவிட்டு தான் எனக்குப் பழக்கமே தவிர யாரையும் நான் அழிக்க நினைத்தில்லை. எம்எல்ஏ பழனியாண்டி குவாரியில் தவறு செய்திருக்கிறார் என ஆய்வில் கண்டறிந்து அதற்கு முறைப்படி அரசு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். இந்த பிரச்சினைக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
தற்போது எம்எல்ஏ-வாக உள்ள பழனியாண்டி முன்பு ஒரு பதவியிலும் இல்லாமல் இருந்தார். ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட ஏராளமானோர் விருப்பம் தெரிவித்த நிலையில், பழனியாண்டிக்கு சீட் தர வேண்டும் என தலைமையிடம் பேசி, அவரை போட்டியிடச் செய்து, அவருக்காக பிரச்சாரம் செய்து, வெற்றிபெற வைத்து, இவ்வளவு பெரிய பதவியும், கவுரவமும், அந்தஸ்தும் உருவாக்கிக் கொடுத்தது நான் தான். உண்மை இவ்வாறு இருக்கும் போது, அவரை வளர்த்து விட்ட நானே போய் எப்படி அழிக்க நினைப்பேன். அவர் தவறே செய்யாதபோது அதிகாரிகளை பார்த்து ஏன் பயப்பட வேண்டும். அதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டியது தானே” என்றார்.
தமிழகம் முழுவதும் திமுகவினருக்குள் நடக்கும் உட்கட்சி மோதல்களை சமாதானப்படுத்தும் நாட்டாமை பொறுப்பை முதன்மைச் செயலாளரான நேருவிடம் தான் கட்சித் தலைமை ஒப்படைத்திருக்கிறது. இந்த விவகாரத்தில் நாட்டாமைக்கு எதிராகவே பிராது வந்திருக்கிறது. யாரை வைத்து எப்படித் தீர்க்கிறார்கள் என்று பார்க்கலாம்!