கோவில்பட்டி, ஓட்டப்பிடாரத்தில் அண்ணாமலை உருவபொம்மையை எரித்த அதிமுகவினர்!


கோவில்பட்டி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசியதாக பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து கோவில்பட்டியில் இன்று அதிமுகவினர் 2 இடங்களில் அவரது உருவ பொம்மையை எரித்தனர்.

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலைய நுழைவாயில் முன்பும், கிழக்குப் பகுதி வாசல் பகுதியிலும் நகர்மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பக மூர்த்தி, ஒன்றிய அதிமுக செயலாளர்கள் அன்புராஜ், அழகர்சாமி, பழனிச்சாமி, மகளிரணி மாவட்டச் செயலாளர் பத்மாவதி உள்ளிட்ட பலர் கூடிநின்று அண்ணாமலை உருவபொம்மையை எரித்து, அவரை கண்டித்து கோஷமிட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார், விரைந்து வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

இதேபோல், விளாத்திகுளத்தில் முன்னாள் எம்எல்ஏ-வான சின்னப்பன் தலைமையிலான அதிமுகவினர் பேருந்து நிலையம் முன்பு அண்ணாமலை உருவ பொம்மையை எரித்து, கண்டன கோஷங்களை எழுப்பினர். ஓட்டப்பிடாரத்தில் முன்னாள் எம்எல்ஏ-வான மோகன் தலைமையில் அதிமுகவினர் அண்ணாமலை உருவபொம்மையை எரித்து, கோஷமிட்டனர். தொடர்ந்து காவல் ஆய்வாளர் ராஜ் தலைமையிலான போலீஸார் அங்கு வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

இதற்கிடையே, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய பாஜக தலைவர் ஆர்.பார்த்திபன், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில்,"பாஜக தலைவர் அண்ணாமலை படத்துடன் கூடிய உருவபொம்மையை அதிமுகவினர் நடுரோட்டில் வைத்து எரித்தனர். இதனால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகார் மனுவில் கூறியுள்ளார். மேலும் தங்களது புகாரின் மீது நடவடிக்கை எடுத்து வழக்குப் பதிவு செய்யாவிட்டால் போராட்டம் நடத்துவோம் எனவும் பாஜகவினர் எச்சரித்துள்ளனர்.

x