ரூ.35 லட்சம் கட்டண பாக்கி: காரைக்காலில் பழுதடைந்து நிற்கும் கப்பலை சிறை பிடிக்க உத்தரவு


சென்னை: தனியார் நிறுவனத்துக்கு இழுவை கட்டணமாக ரூ. 35 லட்சம் பாக்கி வைத்துள்ளதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், காரைக்காலில் பழுதடைந்து நிற்கும் சரக்கு கப்பலை சிறை பிடிக்க வணிக கப்பல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காக்கிநாடாவைச் சேர்ந்த ஆதித்யா என்ற தனியார் மரைன் நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘எங்களது நிறுவனம் தரைதட்டி நிற்கும் கப்பல்களையும், பழுதாகி நிற்கும் கப்பல்களையும் இழுத்துக் கொண்டு வரும் பணியை மேற்கொண்டு வருகிறது. காரைக்கால் துறைமுகத்தில் பழுதாகி நின்ற டால்பின் நம்பர்-1 என்ற சரக்குக் கப்பலை காரைக்காலில் இருந்து விசாகப்பட்டிணத்துக்கு இழுத்து செல்வதற்காக அந்நிறுவனம் எங்களுடன் ஒப்பந்தம் செய்தது. அதையடுத்து, எங்களது இழுவை கப்பல் காரைக்கால் சென்றபோது டால்பின் நம்பர்-1 கப்பல் இழுத்துச் செல்ல முடியாத நிலையில் இருந்தது.

இந்நிலையில் பழுதடைந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக காரைக்காலிலேயே டால்பின் நம்பர்-1 கப்பல் நிறுத்தப்பட்டிருப்பதால் அதை அங்கிருந்து இழுத்துச் செல்ல சென்னை வணிக கப்பல் துறையும் அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில், டால்பின் நம்பர்-1 கப்பல் காரைக்காலில் இருந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கடந்த ஆக.8 அன்று எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தக் கப்பல் அங்கிருந்து இழுத்துச் செல்லப்பட்டால் அந்நிறுவனம் எங்களுக்குத்தர வேண்டிய ரூ.35 லட்சத்து 71 ஆயிரத்து 342-ஐ வசூலிக்க முடியாது. எனவே, டால்பின் நம்பர்-1 கப்பலை சிறை பிடிக்க வணிக கப்பல் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி வாதிட்டார்.அதையடுத்து நீதிபதி, டால்பின் நம்பர்-1 என்ற அந்த கப்பலை சிறை பிடிக்க வணிக கப்பல்துறைக்கு உத்தரவிட்டு, இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனம் வரும் செப்.2-ம் தேதிக்குள் பதிலளிக்க அறிவுறுத்தினார்.

x