முல்லை பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் 90% நிறைவு: ஜூலையில் மதுரை மக்களுக்கு குடிநீர் விநியோகிக்க திட்டம்


கோப்புப் படம்

மதுரை: முல்லை பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் 90 சதவீதம் நிறைவு பெற்ற நிலையில், வரும் ஜூலை மாதத்தில் மதுரை மாநகர பொதுமக்களுக்கு, இந்த திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

உலகின் மிக முக்கிய தொன்மையான நகரில் மதுரை முதன்மையானது. கடந்த காலத்தில் வைகை ஆறு இந்த நகரின் மையத்தில் இரு கரைகளையும் தொட்டபடி வற்றாத ஜீவ நதியாக ஓடியது. தற்போது இந்த ஆறு ஆண்டு முழுவதுமே வறட்சிக்கு இலக்காகிவிட்டதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்டது. நகரில் வசிக்கும் 20 லட்சம் மக்களும், மாநகராட்சி விநியோகிக்கும் குடிநீரை நம்பியே உள்ளனர்.

மழை பெய்தால், இந்த தேவை குறையும். கோடை காலத்தில் குடிநீர் தேவை அதிகரித்து பற்றாக்குறையால் மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தும் நிலையே உள்ளது. மதுரை மாநகராட்சியின் இன்றைய ஒருநாள் குடிநீர்த் தேவை 268 மில்லியன் லிட்டர்.

ஆனால், தற்போது கிடைப்பதோ 192 மில்லியன் லிட்டர்தான். வைகை அணையிலிருந்து தினமும் 115 மில்லியன் லிட்டா், வைகை ஆற்றுப் படுகையிலிருந்து 47 மில்லியன் லிட்டர், காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் 30 மில்லியன் லிட்டர் உள்பட மொத்தம் 192 மில்லியன் லிட்டா் குடிநீர் பெறப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

கடந்த 5 ஆண்டாக ஒரளவு தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைகளும், கோடை மழையும் பெய்ததால் குடிநீர் பற்றாக்குறை மதுரை மாநகரில் பெரியளவிற்கு வெளியே தெரியவில்லை. ஆனால், நிரந்தரமாக மதுரை மாநகராட்சியின் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்கு 100 வார்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடில்லாமல் விநியோகம் செய்வதற்கு அம்ரூத் திட்டத்தில் ரூ.1295.76 கோடியில் முல்லை பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் கடந்த அதிமுக ஆட்சி இறுதியில் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ், முல்லை பெரியாறு லோயா் கேம்ப்பிலிருந்து மதுரை நகருக்கு கூடுதலாக 125 மில்லியன் லிட்டா் குடிநீர் கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் தடுப்பனை கட்டப்பட்டுள்ளது. அதில் தண்ணீர் தேக்கப்பட்டு அங்கிருந்து பிரதான குழாய் மூலம், பண்ணைப்பட்டி சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டு அங்கு சுத்திரிக்கப்பட்டு மதுரை மாநகருக்கு கொண்டு வரப்படுகிறது.

இதற்காக 38 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது. இதில், ஒரு சில மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டும் பணிகள் மட்டுமே பாக்கி உள்ளது. அதுபோல், மாநகராட்சி 100 வார்டுகளில் 43 வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு குடிநீர் குழாய் பதிக்கும் பணி முடிந்துள்ளது. மீதமுள்ள வார்டுகளில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “முல்லை பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் 5 பகுதிகளாக நடக்கிறது. லோயர் கேம்பில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர், பண்ணைப்பட்டியில் சுத்திகரித்து, மதுரை பைபாஸ்-ரோடு வரை கொண்டு வந்து, மேல்நிலை நீர் தேக்கத்தொட்டிக்கு வெற்றிகரமாக ஏற்றப்பட்டுள்ளது. தற்போது மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் குடிநீரை தேக்கி பரிசோதனை செய்யும் பணி நடக்கிறது.

இதுவரை 90 சதவீதம் முல்லை பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தில் 100 வார்டுகளில் முழுமையாக குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகளை முடிக்க 2025-ம் ஆண்டு மே வரை காலக்கெடு உள்ளது. ஆனால், வரும் டிசம்பர் மாதத்திலே இப்பணிகள் முடிக்கப்படும்.

அதுவரை முல்லை பெரியாறு குடிநீரை இந்த திட்டத்தில் மதுரைக்கு கொண்டு வருவதற்கு காத்திருக்க வேண்டாம். வரும் ஜூலை மாதத்திலே இந்த குடிநீர் திட்டம் முடிந்த வார்டுகளில் புதிய குடிநீர் விநியோக குழாய்கள் மூலமாகவும், மற்ற வார்டுகளில் பழைய குடிநீர் குழாய்கள் மூலமாகவும் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடில்லாமல் கிடைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது” என்றனர்.

திட்ட மதிப்பீடு 18 சதவீதம் உயர்கிறது: முல்லை பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.1295.76 கோடியில் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த திட்டத்தில் லோயர் கேம்ப் தடுப்பணை கிடையாது. அதுபோல், வேறு சில பணிகளும் சேர்க்கப்படவில்லை. மேலும், ஜிஎஸ்டி வரி உள்பட சேர்க்கப்பட்ட புதிய பணிகளையும் சேர்த்து தற்போது முல்லை பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் திட்டமதிப்பீடு சுமார் 18 சதவீதம் உயரும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்

x