“ரஜினி குறித்த எனது நகைச்சுவையை பகைச்சுமையாய் மாத்தாதீங்க” -  அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள்!


“ரஜினி குறித்த எனது நகைச்சுவையை பகைச்சுமையாய் யாரும் மாற்ற வேண்டாம்" என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் நடந்த அமைச்சர் எ.வ.வேலுவின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “திமுகவில் சீனியர்கள் வகுப்பை விட்டு வெளியே செல்ல மறுக்கிறார்கள். அதிலும் கலைஞர் கண்ணிலே விரல் விட்டு ஆட்டியவர் துரைமுருகன்” என்று பேசியிருந்தார். அவரின் இந்தப் பேச்சுக்கு அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது. அப்போது திடீரென, முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பார்த்து 'ஹேட்ஸ் ஆப் யு' என்றார் ரஜினி.

இதையடுத்து, நேற்று வேலூரில் நடைபெற்ற கிருபானந்த வாரியார் ஜெயந்தி விழாவில் பங்கேற்ற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் ரஜினியின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “மூத்த நடிகர்கள் எல்லாம் பல் போய், தாடி வளர்ந்து வயதான நிலையில் நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது” என்றார்.

ரஜினியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்த இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதுடன் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று வேலூர் விஐடி கல்லூரியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகன், நிகழ்ச்சியின் நடுவே செய்தியாளர்களிடம் பேசுகையில், "ரஜினி குறித்த எனது நகைச்சுவையை பகைச்சுமையாக யாரும் மாற்ற வேண்டாம்" என வேண்டுகோள் விடுத்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்புக்கு முன்பாக செல்போனில் தனக்கு வந்த ஒரு தகவலை அமைச்சர் துரைமுருகன் நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது அருகில் இருந்த கவிஞர் வைரமுத்துவிடம் அந்த தகவலை துரைமுருகன் காண்பித்தார். பின்னர், கவிஞர் வைரமுத்து எழுதிக்கொடுத்த குறிப்பை துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறிவிட்டு நிகழ்ச்சியில் மீண்டும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

x