தென்காசியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை: பொதுமக்கள் அச்சம்!


தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய விவசாய நிலங்களில் காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து மா, தென்னை, வாழை, நெல் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி வருகின்றன. விவசாய நிலங்களில் உள்ள தண்ணீர் குழாய், வேலிகளையும் உடைத்து சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டவும், அவை மீண்டும் வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களில் புகுவதைத் தடுக்கவும் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொக்கம்பட்டி அருகே யானை தாக்கியதில் தோட்ட காவலாளி ஒருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், இன்று காலையில் வடகரை அருகே கரிசல் குடியிருப்பு கிராமத்தில் விவசாய நிலங்களில் ஒற்றை யானை சுற்றித் திரிந்ததை பார்த்த பொதுமக்கள் இது குறித்து வனத்துறைக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் அங்கு விரைந்தனர்.

இதையடுத்து, பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியில் வர வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் அறிவுறுத்தினர். பகல் நேரத்தில் கிராமப் பகுதி வழியாக யானையை வனப்பகுதிக்குள் விரட்டினால் சேதம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கருதிய வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், ஒலி எழுப்பியும் யானையை அருகில் உள்ள குளத்துப் பகுதிக்கு விரட்டினர்.

அங்கிருந்து யானை வெளியே வராதவாறு சுற்றிலும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊர் அடங்கியதும் இரவு நேரத்தில் அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் ஆலோசித்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

x