திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே, சாலையில் சுற்றித் திரிந்த 5 எருமை மாடுகள் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அருகே பட்டரைபெரும்புதூர், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மாடுகள் சாலையோரத்தில் விபத்தில் உயிரிழந்து கிடப்பதாக இன்று அதிகாலை ரோந்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில், சாலையில் சுற்றித் திரிந்த 7 எருமை மாடுகளில் 5 மாடுகள் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதும், 2 மாடுகள் கால்கள் மற்றும் உடல் பகுதிகளில் அடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸார் காயமடைந்த மாடுகளை சீத்தஞ்சேரியில் உள்ள கோசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அந்த மாடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து, திருவள்ளூர் தாலுக்கா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், திருவள்ளூர், புல்லரம்பாக்கம், மணவாள நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் இதுபோன்று சுற்றித் திரியும் மாடுகள் மீது லாரிகள் மோதி கால்நடைகள் உயிரிழப்பதும், கால்நடைகள் மீது வாகனங்கள் மோதி வாகன ஓட்டிகள் காயம் அடைவதும் தொடர் நிகழ்வுகளாக உள்ளது. ஆகவே, மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் இனியும் இதுபோல் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.