நடுரோட்டில் கட்சி மாறிய அதிமுக நிர்வாகி... வேட்டியை அவிழ்த்து சாலையில் வீசியதால் பரபரப்பு!


வேட்டியை அவிழ்த்து வீசும் முத்துக்குமரன்

எடப்பாடி பழனிசாமி சரியில்லை, அதனால் கட்சி மாறுகிறேன் என்று கூறி அதிமுக நிர்வாகி ஒருவர் நடு ரோட்டில் அதிமுக கரை வேட்டியை அவிழ்த்து வீசிவிட்டு பாஜகவில் இணைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேட்டியை அவிழ்த்து வீசும் முத்துக்குமரன்

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். ஆனால், புரட்சி பாரதம், எஸ்டிபிஐ ஆகிய சிறிய கட்சிகளைத் தவிர வேறு கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டவில்லை. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிமுக குழுவினர் தலைமை அலுவலகத்தில் மணிக்கணக்கில் காத்திருந்தும் யாரும் வரவில்லை.

இதனால் அதிமுக கடுமையான விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. ஓ.பன்னீர் செல்வமும், டி.டி.வி.தினகரனும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். கூட்டணி சரியான முறையில் அமையாததால் அதிமுக தொண்டர்களும் சோர்வடைந்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி

இந்தநிலையில் விழுப்புரம் அருகே ஏமப்பூரை சேர்ந்த அதிமுக நிர்வாகி முத்துக்குமரன் என்பவர், எடப்பாடி பழனிசாமி சரியில்லை என்று கூறி அதிமுக கரைவேட்டியை நடுரோட்டில் அவிழ்த்து போட்டுவிட்டு பாஜகவில் இணைந்துள்ளார்.

'நான் ஏமப்பூர் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்து வருகிறேன். அதிமுகவில் கிளைக்கழக துணைச் செயலாளராக இருக்கிறேன். அதிமுகவைப் பிடிக்கவில்லை, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சரியாக செயல்படவில்லை. இதனால் அக்கட்சியிலிருந்து விலகுகிறேன்' என்று அவர் கூறியுள்ளார்.

இதைக் கூறிய அவர், நடுரோட்டிலேயே தான் கட்டியிருந்த அதிமுக கரைவேட்டியை அவிழ்த்து சாலையில் வீசினார். அதையடுத்து, அங்கிருந்த பாஜக மாவட்ட துணைத்தலைவர் வேலு முன்னிலையில் அக்கட்சியில் இணைவதாக அறிவித்தார். அதற்கு சம்மதமாக வேலு தந்த பாஜக கரைவேட்டியை வாங்கி அங்கேயே முத்துக்குமரன் அணிந்து கொண்டார்.

அவருடன் அதே பகுதியை சேர்ந்த மேலும் சிலரும், அதிமுக கரைவேட்டியை அவிழ்த்து வீசிவிட்டு பாஜகவில் இணைந்தனர். இந்த பகுதி அதிமுக மாவட்ட செயலாளராக இருக்கும் குமரகுரு எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர் என்ற நிலையில் அங்குள்ள அதிமுக நிர்வாகி பாஜகவில் இணைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x