முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு: கருணாநிதி நினைவு நாணயத்தை வழங்கினார்


சென்னை: முதல்வர் ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் சந்தித்தார். அவருக்கு கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை முதல்வர் வழங்கினார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா சென்னையில் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது. நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். இந்த விழாவில் கலந்துகொள்ள, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. வேறு பணிகள் இருந்ததால் விழாவில் அவர் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் கமல்ஹாசன் நேற்று சந்தித்தார். நாணயம் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்ததற்காக மகிழ்ச்சி தெரிவித்த அவர், முதல்வரின் அமெரிக்க பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு கருணாநிதி உருவம் பொறித்த நாணயத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். மநீம பொதுச் செயலாளர் ஆ.அருணாச்சலம் உடன் இருந்தார்.

இந்த சந்திப்பு குறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:

நவீன தமிழகத்தை நிர்மாணித்தவர், இந்திய அரசியலில் மாபெரும் சக்தியாக விளங்கியவர், வாழ்நாள் முழுவதையும் தமிழ், தமிழர் நலனுக்காக அர்ப்பணித்த வரலாற்று நாயகர் கருணாநிதி. அவருக்கு சிறப்பான முறையில் நூற்றாண்டு விழா நடத்தி, முத்தாய்ப்பாக நாணயம் வெளியாக பெருமுயற்சி எடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பாராட்டு தெரிவித்தேன்’ என குறிப்பிட்டுள்ளார்

x