கோயம்பேடு சந்தையில் முட்டைகோஸ் விலை வீழ்ச்சி: கிலோ ரூ.5-க்கு விற்பனை


கோப்புப் படம்

சென்னை: கோயம்பேடு சந்தையில் முட்டைகோஸ் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தீவிரமடைந்து பரவலாக மழை பெய்தது. தமிழகத்தில் இப்பருவமழை காலத்தில் வழக்கத்தை விட 73 சதவீதம் அதிகமாக மழை கிடைத்துள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளது. அதன் தாக்கத்தால் அவற்றில் விலையும் குறைந்து வருகிறது.

கத்தரிக்காய், முள்ளங்கி, வெண்டைக்காய், முருங்கைக்காய், பீ்ட்ரூட், புடலங்காய், நூக்கல் ஆகிய காய்கறிகள் தலா ரூ.10-க்கு விற்கப்பட்டு வருகிறது. முட்டைகோஸ் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி கிலோ ரூ.5-க்கு விற்கப்பட்டது. அதே நேரத்தில் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.40 ஆக உயர்ந்துள்ளது. எப்போதும் உச்சத்தில் இருக்கும் சாம்பார் வெங்காயம் கிலோ ரூ.30-க்கு விற்கப்பட்டு வருகிறது. மற்ற காய்கறிகளான அவரைக்காய், கேரட் தலா ரூ.50, பச்சை மிளகாய், பீன்ஸ் தலா ரூ.35, உருளைக்கிழங்கு ரூ.25, தக்காளி ரூ.22, பாகற்காய் ரூ.20 என விற்கப்பட்டு வருகிறது.

முட்டைகோஸ் விலை வீழ்ச்சி அடைந்திருப்பது தொடர்பாக கோயம்பேடு சந்தை வியாபாரிகளிடம் கேட்டபோது, "கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் அதிக அளவில் முட்டைகோஸ் விளைந்துள்ளது. அதனால் வரத்தும் அதிகரித்திருப்பதால் அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அடுத்த ஓரிரு வாரங்களுக்கு இதை நிலை நீடிக்க வாய்ப்புள்ளது" என்றனர்.

x