புதுச்சேரி: கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதால் கொசு உற்பத்தி அதிகரிக்கும் நீர்நிலைகள், புதர் மண்டி கிடக்கும் பகுதிகளை கண்டறிந்து ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியை முதல்வர் ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை (ஆக.25) தொடங்கி வைத்தார்.
புதுச்சேரியில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. கொசுக்களால் பரவும் நோய்களான டெங்கு மலேரியா சிக்கன்குனியா முதலானவைகளை கட்டுப்படுத்தவும் கோரிக்கை வலுத்துள்ளது. கொசுக்களைக் கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. தேங்கிய நீர்நிலைகள், புதர் மண்டிய பகுதிகள், காலி மனைகளில் அதிகளவில் குப்பைகள், நீர் தேங்கிக் காணப்படுவதும் கொசுகள் பரவ முக்கிய காரணமாகியுள்ளது.
காலி மனைகளை வைத்திருப்போர் அதை தூய்மையாக பராமரிக்க நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்காத சூழலும் உள்ளது. மேலும் நீர்நிலை, புதர் மண்டிய பகுதிகளில் கொசு மருந்து தெளிக்க போதிய பணியாளர்களும் இல்லை. இந்நிலையில் கொசு அதிகரிக்கும் இடங்களை கண்டறிந்து அங்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணிகளை தொடங்க உள்ளாட்சித்துறை திட்டமிட்டது.
அதன் அடிப்படையில் இத்திட்டத்தை முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று துவங்கி வைத்தார். ஆட்கள் இல்லா விமானங்களான ட்ரோன் மூலம் கொசு லார்வாக்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் கிருமி நாசினியை தெளிப்பதன் மூலம் கொசு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்த கிருமி நாசினியானது மத்திய அரசின் விசிஆர்சி அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது.
இதுகுறித்து, பல்வேறு நகரங்களில் பயன்படுத்தும் கிருமி நாசினியைத்தான் இங்கும் பயன்படுத்த உள்ளோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் பேரவைத்தலைவர் செல்வம், பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், உள்ளாட்சித் துறை இயக்குநர் சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.