தாம்பரத்தில் சிறு பாலம் சரிந்து உள்வாங்கியதால் போக்குவரத்து பாதிப்பு


சாலை பணியின்போது சரிந்த சிறு பாலம்.

தாம்பரம்: தாம்பரத்தில் இருந்து சோமங்கலம் செல்லும் சாலையை ஒட்டி பாப்பான் கால்வாய் வழியாக அடையாறு ஆறு செல்கிறது. ஒவ்வொரு மழையின் போதும், சாலையை ஒட்டிய நிலங்களில் வெள்ளம் தேங்கும். இதன் காரணமாக, அப்பகுதியில் மண் பிடிமானம் குறைந்து, சாலையில் திடீர் திடீரென ஜிக் ஜாக்’ பள்ளம் ஏற்படுவதும், சாலை உள்வாங்குவதும் காலம் காலமாக தொடர்கிறது.

சாலை உள்வாங்குவதை தடுக்க ரூ.12 கோடி செலவில், 1 கி.மீ. துாரத்துக்கு நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலையை அகலப்படுத்தி கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சாலை மட்டத்தில் இருந்து 13 அடி ஆழத்துக்கு தடுப்பு சுவர் கட்டப்படுகிறது. இதற்காக இந்திரா நகர் மற்றும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு செல்வதற்கான சிறு பாலத்தை ஒட்டி பள்ளம் தோண்டினர்.

இப்பணியின்போது, சிறுபாலம் சரியாமல் இருக்க இரும்பு தடுப்புகளை நட்டு வைத்திருந்தனர். இந்நிலையில், நேற்று காலை இந்த சிறுபாலம் திடீரென சரிந்து உள்வாங்கியது. இதனால் இந்திரா நகர் மற்றும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கான போக்குவரத்து தடைப்பட்டது.

x