விளையாட்டு மைதான இலவச நிலத்தை வேறு பணிக்கு பயன்படுத்த முடியாது: சென்னை ஐகோர்ட்


சென்னை: விளையாட்டு மைதானத்துக்காக இலவசமாக வழங்கப்பட்ட நிலத்தை வேறு பணிகளுக்கு பயன்படுத்தவோ, விற்கவோ முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை திருவான்மியூர் திருவள்ளுவர் நகரில் இந்து சேவா சமாஜம் நடத்தும் பள்ளிக்காக கடந்த 1989-ம் ஆண்டு சுமார் 1,900 சதுர மீட்டர் நிலத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 50 சதவீத மானியத்துடன், நிபந்தனை அடிப்படையில் ஒதுக்கி கொடுத்தது. அதன்படி அந்த அமைப்புக்கு வழங்கப்பட்ட நிலத்தை சரிசமமாக பிரித்து ஒரு பாதியில் பள்ளிக்கூடம் கட்டவும், மற்றொரு பாதியை பொது விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், அந்த மைதானத்தில் அப்பகுதி பொதுமக்களும் விளையாட்டு நிகழ்வுகளை நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

ஒப்பந்தப்படி 50 சதவீத தொகையை உரிய காலக்கெடுவுக்குள் செலுத்தாததால், வட்டியுடன் சேர்த்து ரூ.22 லட்சத்து 33 ஆயிரத்து 946-ஐ இந்து சேவா சமாஜம் கடந்த 2005-ம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்திடம் செலுத்தியது. ஆனால் அந்த அமைப்பு விளையாட்டு மைதானத்துக்கு ஒதுக்க வேண்டிய இடத்தையும் சேர்த்து சுற்றுச்சுவர் எழுப்பி பள்ளிக்கூடம் கட்டியதால், ஏற்கெனவே கூறியதுபோல 50 சதவீத மானிய சலுகை அளிக்க முடியாது எனக்கூறிய தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கடந்த 2010-ம் ஆண்டு மேலும் ரூ.32 லட்சத்து 72 ஆயிரத்து 400-ஐ செலுத்தினால் மட்டுமே அந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுக்க முடியும் என கூறியது.

அதையடுத்து அந்த தொகையை செலுத்திய இந்து சேவா சமாஜம் பத்திரப்பதிவு செய்து கொடுக்க கோரியபோது, கடந்த 2018-ம் ஆண்டு அப்போதைய மதிப்பின்படி ரூ.6 கோடியே 10 லட்சத்து 8 ஆயிரத்தை செலுத்தினால் மட்டுமே பத்திரப்பதிவு செய்து கொடுக்க முடியும் எனக்கூறியது.

இதை எதிர்த்து இந்து சேவா சமாஜம், சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் வழக்கு தொடர்ந்தது. இந்தவழக்கு விசாரணை நீதிபதி ஜெ.நிஷாபானு முன்பாக நடந்தது. அப்போது வீட்டு வசதி வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.வீரசேகரன், ‘‘விளையாட்டு மைதானத்துக்காக ஒதுக்கப்பட்ட 50 சதவீத நிலத்தை மனுதாரர் அமைப்பு சுற்றுச்சுவர் எழுப்பி பொதுமக்கள் யாரும் அங்கு செல்ல முடியாதபடி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.

தற்போது கடந்த 2024 ஜன.31-ம் தேதி வரை வட்டியுடன் சேர்த்து விளையாட்டு மைதானத்துக்குரிய நிலத்துக்கு ரூ.13 கோடியே 18 லட்சத்து 35 ஆயிரத்து 633-ஐ செலுத்தினால் மட்டுமே பத்திரப்பதிவு செய்து கொடுக்க முடியும்’’ என வாதிட்டார்.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பி.ராஜா, ‘‘பள்ளிக்கூடம் கட்டியதுபோக மீதமிருக்கும் 50 சதவீத இடத்தை வேறு யாரும் ஆக்கிரமித்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி தங்களுக்கு அந்த நிலத்தை முழுமையாக பத்திரப்பதிவு செய்து கொடுக்க உத்தரவிட வேண்டும்’’ என கோரினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெ. நிஷா பானு பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘விளையாட்டு மைதானத்துக்காக இலவசமாக ஒதுக்கப்பட்ட நிலத்தை, வேறு பயன்பாட்டுக்கோ அல்லது வேறு எந்த காரியத்துக்காகவும் பயன்படுத்த முடியாது. அதேபோல வேறு யாருக்கும் விற்கவும் முடியாது. எனவே பள்ளிக்கூடம் செயல்பட்டு வரும் 50 சதவீத நிலத்துக்கு ரூ.22.33 லட்சத்தை வீட்டு வசதி வாரியம் ஏற்கெனவே பெற்றுக் கொண்டு விட்டதால் அந்த நிலத்தை மனுதாரர் அமைப்புக்கு உடனடியாக பத்திரப்பதிவு செய்து கொடுக்க வேண்டும்.

அதேபோல விளையாட்டு மைதானத்துக்காக இலவசமாக ஒதுக்கப்பட்ட நிலத்தை சுற்றி போடப்பட்டுள்ள சுற்றுச்சுவரை மனுதாரர் அமைப்பு உடனடியாக அகற்றி அதை விளையாட்டு மைதானமாக பொது பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அந்த நிலத்துக்காக மனுதாரர் அமைப்பிடம் பெற்ற ரூ.32.72 லட்சத்தை வீட்டு வசதி வாரியம் 6 சதவீத வட்டியுடன் திருப்பி கொடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

x