ஆளுநர் உரையில் எந்த புதுவித திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2024ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று கூறி ஆளுநர் உரையை வாசிக்க மறுத்து அமர்ந்த நிலையில், ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்து முடித்தார். இதையடுத்து தேசிய கீதம் வாசிப்பதற்கு முன்னரே ஆளுநர் ரவி அவையை விட்டு வெளியேறினார்.
இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், “ஆளுநர் உரை ஊசிப்போன பண்டம், உப்புசப்பில்லாதது” என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
சட்டமன்றத்திற்கு வெளியே தனது கட்சி உறுப்பினர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "ஆளுநர் உரையை படிக்க மறுத்தது அரசுக்கும், ஆளுநருக்கும், சபாநாயகருக்கும் இடையே உள்ள பிரச்சனை, அதைப்பற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.
தமிழக அரசு தயாரித்த கவர்னர் உரையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் எதையும் அரசு அறிவிக்கவில்லை. தமிழக அரசு தயாரித்த கவர்னர் உரை, உப்பு சப்பு இல்லாத ஊசிப்போன உணவு பண்டம். அதிமுக ஆட்சிக் காலத்தில் நாங்கள் கொண்டு வந்ததைத்தான் தற்போது செயல்படுத்தி வருகிறார்கள்" என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று முடிவாகிறது தொகுதிகளின் எண்ணிக்கை... மூன்று கட்சிகளுடன் திமுக பேச்சு!