இலங்கை கடற்படையினரால் நாகை மீனவர்கள் 11 பேர் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்


நாகப்பட்டினம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நாகை மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நாகை மாவட்டம் அக்கரைப் பேட்டை மீனவக் கிராமத்தைச் சேர்ந்த சாந்தி பழனிசாமி என்ப வருக்குச் சொந்தமான விசைப் படகில், நாகரத்தினம், சஞ்சய், பிர காஷ், சுதந்திர சுந்தர், சந்துரு, ரமேஷ், ஆனந்தவேல், சிவராஜ், வர்ஷன், சுமன், ராஜேந்திரன் ஆகிய 11 மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி 11 மீனவர்களையும் கைது செய்து, காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர். மேலும், அவர்களது படகும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த 2 வாரங்களில் 3 முறை தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது இலங்கை கடற்படையினரால் 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது நாகை மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தலைவர்கள் கண்டனம் - பாமக தலைவர் அன்புமணி: கடந்த 2 மாதங்களில் மட்டும் தமிழக மீனவர்கள் 120 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இது ஒட்டுமொத்த இந்தியாவின் இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதலாகத்தான் பார்க்க வேண்டும். இலங்கை அரசு பொருளாதார நெருக்கடியில் சிக்கியபோது இந்தியா உதவியது. அந்த நன்றி கூட இல்லாமல், மீனவர்களை கைது செய்வதன் மூலம் இந்தியாவை இலங்கை சீண்டிக் கொண்டிருக்கிறது. எனவே, இலங்கை அரசுக்கு இந்தியா சரியான பாடம் புகட்ட வேண்டும். இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி, மீனவர் பிரச்சி னைக்கு மத்திய அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன்: இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடும் புயல், காற்று, மழைக் காலங் களில் கடல் எல்லைகளைத் தீர்மானிப்பது கடினம். மேலும், பல்வேறு கடல் சார் மீனவர் ஒப்பந்தங்களை இலங்கை அப்பட்டமாக மீறுகிறது. சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக மீட்பதுடன், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வுகாண மத்திய அரசு முயற்சிக்க வேண்டும்.

இதேபோல, பல்வேறு கட்சித்தலைவர்களும், நாகை மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

324 மீனவர்கள் கைது... தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்வதை, நான் ஏற்கெனவே பலமுறை சுட்டிக்காட்டியுள்ளேன்.

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 324 மீனவர்களையும், 44 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். தொடர் கைது நடவடிக்கைகளால் தமிழக மீனவர்கள் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருவதுடன், அவர்களது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 வாரங்களில் இலங்கையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் கடலில் மீனவர்களைத் தாக்கிய சம்பவங்களும் நடந்துள்ளன. இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டியது அவசியம்.

எனவே, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிப்பதற்கு, தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

x