தமிழகத்தில் ஆன்மிகம் குறித்து பேசாமல் அரசியல் செய்ய முடியாது: பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை கருத்து


கோவை: தமிழக அரசே முத்தமிழ் முருகன் மாநாடு நடத்துவது, ஆன்மிகம் குறித்து பேசாமல் அரசியல் நடத்த முடியாது என்பதைக் காட்டுகிறது என்று பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழக பாஜகவில் தற்போது 42 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். உறுப்பினர் சேர்க்கையில் தொடர்ந்து கவனம் செலுத்திவருகிறோம்.

இது ஆன்மிக பூமிதான். சனாதன தர்மத்தை எதிர்த்துப் பேசினாலும், ஆன்மிகத்தைப் பேசாமல் அரசியல் செய்ய முடியாது என்பதை, முத்தமிழ் முருகன் மாநாடு உணர்த்துகிறது. தமிழக அரசே ஆன்மிக மாநாடு நடத்துவது, தமிழகம் ஆன்மிகத்தின் பக்கம்தான் என்பதை வெளிப்படுத்துகிறது. பெரியார், அண்ணா கொள்கைகளைப் பின்பற்றுவோர், ஆண்டாளின் தமிழையும் பின்பற்றும் நிலை ஏற்படும்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலங்களை இன்னும் கையகப்படுத்த வேண்டியுள்ளது. பலகோயில்களை மேம்படுத்த வேண்டும். தவெக கட்சிக் கொடியில் இருப்பது வாகைப் பூவா, தூங்குமூஞ்சி மரமா என்று தெரியவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியினர், யானை சின்னம் அவர்களுக்குச் சொந்தமானது என்று கூறியுள்ளனர். சட்ட ரீதியிலான தவறு இருந்தால், விஜய் கட்சியினர் மாற்றிக்கொள்ள வேண்டும்.

உலகத் தலைவர்களுக்கு முன்னுதாரணமாக பிரதமர் மோடி உக்ரைன் சென்றுள்ளார். உலக அமைதிக்காகவும், பல்வேறு நாடுகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவும் நோபல் பரிசு கொடுக்கவேண்டும் என்றால், அதை நமது பிரதமருக்குத்தான் கொடுக்க வேண்டும்.

பிணக்கமான உறவுதான்... பாஜக-திமுக இடையே எப்போதும் இணக்கமான சூழல் இருக்காது. கொள்கை ரீதியாக எங்களுக்கும், அவர்களுக்கும் பிணக்கமான உறவுதான் உள்ளது. கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவுடன், அவர்களுடனான நட்பு போய்விட்டது.

அதிமுகவால் மட்டுமே பாஜகவுக்கு 4 எம்எல்ஏ-க்கள் கிடைத்தார்கள் என்று அவர்கள் கூறுவதை ஏற்க முடியாது. மக்களவைத் தேர்தலில் எங்களது வாக்கு வங்கியை நிரூபித்துள்ளோம்.

ஏதாவது பிரச்சினை ஏற்பட்ட பின்னர்தான் பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை மேற்கொள்கிறது. போலியாக ஒருவர் என்சிசி முகாம் நடத்தி, குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதை ஏற்கவே முடியாது.

இதுபோன்ற விவகாரங்களில் கல்வித் துறை இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கிருஷ்ணகிரி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக உரியமுறையில் விசாரித்து, உண்மையை வெளிக்கொணர வேண்டும். இவ்வாறு தமிழிசை கூறினார்.

x