கரூரில் பரபரப்பு... அகற்றப்பட்ட அண்ணாமலை பேனர்! பெண் மேயர் அதிரடி


அகற்றப்பட்ட அண்ணாமலை பேனர்

கரூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்க வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டதால் அங்கு பரபரப்பாக சூழல் ஏற்பட்டுள்ளது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் கரூர் நகரம் முழுவதும் நேற்று முதல் சாலைகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் ‘என் மண்; என் மக்கள்’ நடைபயணம் நடைபெற உள்ளது. இன்று மாலை 5 மணிக்கு திருமாநிலையூர் ரவுண்டானா பகுதியில் துவங்கி தான்தோன்றி மலை பெருமாள் கோயில் வரை இன்றைய நடைபயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அப்பகுதியில் அண்ணாமலையை வரவேற்க பேனர்களை பாஜகவினர் வைத்துள்ளனர்.

கரூர் மேயர் கவிதா

இன்று காலை அந்த பகுதிக்கு வந்த திமுவைச் சேர்ந்த கரூர் மேயர் கவிதா கணேசன், சாலைகளில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து ரவுண்டானாவில் வைக்கப்பட்டிருந்த அண்ணாமலை நடைபயண பிரச்சார பேனர் உடனடியாக மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த பாஜகவினர் அங்கு கூடியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால், அங்கு எந்த அசம்பாவிதம் ஏற்படாத வகையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

x