மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் 27 வங்கி கணக்குகள் முடக்கம்: பொருளாதார குற்றப்பிரிவு நடவடிக்கை


சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் 27 வங்கி கணக்குகளை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் முடக்கி உள்ளனர். சென்னை மயிலாப்பூரில் ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட்’ என்ற பெயரில் நிதிநிறுவனம் நடத்தி, 144 முதலீட்டாளர்களிடம் ரூ.24.50 கோடி மோசடி செய்ததாக, அந்நிறுவன இயக்குநரான தேவநாதன் யாதவ் மற்றும்குணசீலன், மகிமைநாதன் ஆகியோரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போலீஸார் சோதனை: தொடர்ந்து, தேவநாதன் யாதவ் தொடர்புடைய மயிலாப்பூர் நிதி நிறுவனம், அவர் நடத்திவரும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் உள்ள அவரது அறை, தி.நகரில் உள்ள அவரது வீடு உட்பட அவர் தொடர்புடைய 12 இடங்களில் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர்.

அப்போது, பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதையடுத்து, தேவநாதன் யாதவின் 5 வங்கி கணக்குகளை போலீஸார் முடக்கினர். இதற்கிடையே, கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது, நிதி நிறுவனத்துக்குச் சொந்தமான 18வங்கி கணக்குகள், குணசீலனின் இரண்டு வங்கி கணக்குகள், மகிமைநாதனின் இரண்டு வங்கிகணக்குகள் என 22 வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்தவகையில், இந்த மோசடி விவகாரம் தொடர்பாக மொத்தம் இதுவரை 27 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

x