குமுளி: தொடர் விடுமுறை காரணமாக தேக்கடிக்கு இன்று சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா சார்ந்த தொழில்களும் வர்த்தகமும் வேகமெடுத்துள்ளன.
தேனி மாவட்டத்தின் தமிழக - கேரள எல்லையான குமுளி அருகே தேக்கடி அமைந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக பகுதியான இங்கு படகு சவாரி, பசுமை நடை, மலையேற்றம், யானை சவாரி உள்ளிட்ட ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக, படகு சவாரி தேக்கடியில் மிகவும் பிரபலம். தினமும் காலை 7.30, 9.30, 11.15, 1.45, பிற்பகல் 3.30 மணி என்று மொத்தம் 5 முறை இங்கு படகுகள் இயக்கப்படுகிறது.
சில வாரங்களுக்கு முன்பு வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவினால் தேக்கடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாய் குறைந்தது. இதனால் குறைவான பயணிகளுடனேயே படகுகள் இயக்கப்பட்டன. இதனால் சில நாட்கள் குறிப்பிட்ட நேரத்தில் படகுகளின் இயக்கமும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஆக.24) முதல், வரும் திங்கள்கிழமை வரை தொடர் விடுமுறை என்பதால் தேக்கடிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் படகுகளின் இருக்கைகள் நிரம்பின. பல நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் சுற்றுலா சார்ந்த தொழில்களும் வர்த்தகமும் விறுவிறுப்படைந்துள்ளன. இது குறித்து சுற்றுலா வழிகாட்டிகள் கூறுகையில், “தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் தேக்கடிக்கு கேரளா, தமிழ்நாடு மட்டுமல்லாது வடமாநில சுற்றுலாப் பயணிகளின் வருகையும் தற்போது அதிகரித்துள்ளது” என்றனர்.