‘என்னிடம் போலீஸார் விசாரணை நடத்தவில்லை’ - மறுப்பு தெரிவித்த இயக்குநர் நெல்சன்!


சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தம்மிடம் காவல்துறை விசாரணை நடத்தியதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என திரைப்பட இயக்குநர் நெல்சன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அவரது கூட்டாளி திருவேங்கடம் உட்பட 8 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

கொலை தொடர்பாக திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், ரவுடிகள் என பல தரப்பட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்த அஸ்வத்தாமன், அவரது தந்தையான பிரபல ரவுடி நாகேந்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி கைது செய்யப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு மேலும் 3 பேர் கைதானார்கள். இதையடுத்து கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது. இந்த வழக்கில் பிரபல ரவுடிகளான சீசிங் ராஜா, சம்போ செந்திலையும் தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியதாக சில நாட்களுக்கு முன்பு பரபரப்பு தகவல் வெளியானது. ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், அவர் வெளிநாடு தப்பி செல்வதற்கு முன்பு இருவரும் செல்போனில் பேசி இருந்ததாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் அடையாறில் உள்ள இல்லத்தில் இயக்குநர் நெல்சனிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக சொல்லப்பட்டது. ஆனால், இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என இயக்குநர் நெல்சன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு விளக்கம் அளித்துள்ள நெல்சன், “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் என்னிடம் போலீஸ் விசாரணை நடத்தியதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது. காவல்துறை தரப்பில் இருந்து எனக்கு எந்த சம்மனும் அனுப்பப்படவில்லை. என்னிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. இந்த தகவலின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தாமல் ஊடகங்கள் செய்தியாக வெளியிடுகின்றன” என்று அவர் தெரிவித்துள்ளார்.

x