உ.பியில் 65 தொகுதிகளில் போட்டி: அகிலேஷ் அறிவிப்பால் இந்தியா கூட்டணியில் குழப்பம்!


அகிலேஷ் யாதவ்

உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 65 தொகுதிகளில் தனது கட்சி போட்டியிடத் தயாராக உள்ளதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இதனால் அங்கு இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணி

பாஜக தலையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரிணமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை அமைத்தனர்.

இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. மத்தியப் பிரதேசத்தில் சமாஜ்வாதிக்கு 6 தொகுதிகளை ஒதுக்க காங்கிரஸ் முன்வந்ததாகவும், அதனை ஏற்காமல் அகிலேஷ் யாதவ் கோபமடைந்து தனியாக வேட்பாளர்களை அறிவித்ததாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் அங்கு இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸும், சமாஜ்வாதியும் தனித்தனியாகக் களமிறங்கியுள்ளன.

மத்தியப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சிக்கு காங்கிரஸ் கட்சி தொகுதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதேபோன்று உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் வரும்போது காங்கிரஸுக்கு நாங்கள் தொகுதி ஒதுக்க மாட்டோம் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து மாநில தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற மாநில செயற்குழுவின் முதல் கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் உரையாற்றினார். அப்போது அவர், 2024 மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 65 தொகுதிகளில் தனது கட்சி போட்டியிடும் என்றும், 15 இடங்களைக் கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுப்பதாகவும் அவர் கூறினார்.

அகிலேஷ் யாதவ்

மேலும், தனது கட்சித் தலைவர்களுக்கும் அவர் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். விவாதத்தின்போது அவர்கள் எந்த அற்பமான கருத்துக்களையும் வெளியிடக் கூடாது என்றார். தேசிய தலைமையின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி அறிக்கைகளை வெளியிடுங்கள். கட்சிக்குள் எந்த ஒரு குழுவாதத்திலும் ஈடுபட வேண்டாம், மாறாக கட்சியை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள் என்றார்.

x