"நாங்கள் யாருக்கும் அடிமையில்லை" என்று அழுத்தம் திருத்தமாக அடித்துச் சொல்லியிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. "புதுவை உள்ளிட்ட நாற்பது தொகுதிகளிலும் அதிமுக போட்டியிட்டு வெல்லும்" என்றும் அவர் உறுதிபடச் சொல்லியிருக்கிறார். இந்த வார்த்தைகள் முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலளிப்பதற்காக அவர் கூறியது என்றாலும் ஸ்டாலினைத் தாண்டியும் சொல்ல வேண்டியவர்களுக்கு அவர் தெரிவித்திருக்கும் மறைமுக மெசேஜ் இது என்கிறார்கள்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைதைக் கண்டித்து முதல்வர் ஸ்டாலின் பேசி வெளியிட்ட காணொலியில், “அதிமுகவைப் போல நாங்கள் அடிமைக்கட்சி இல்லை” என்று குட்டுவைத்திருந்தார். அதற்கு காணொலி வழியாகவே பதில் சொன்ன ஈபிஎஸ், ”அதிமுக யாருக்கும் அடிமை இல்லை; மக்கள் பிரச்சினையை எடுத்துச்சொல்லி எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது” என்று பதிலடி கொடுத்திருந்தார். அது திமுகவுக்கான பதில்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதன்பிறகு அவர் கூறிய வார்த்தைகள் அனைத்தும் இன்னமும் தங்களை ஆட்டுவிக்க நினைக்கும் பாஜகவுக்கானது என்கிறார்கள்.
அப்படி என்னதான் சொன்னார் ஈபிஎஸ்? ”தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுகதான் உள்ளது. மக்கள் பிரச்சினையை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லும் பணியை எதிர்க்கட்சி என்ற முறையில் சிறப்பாகச் செய்து வருகிறோம்” என்று ஈபிஎஸ் கூறியிருந்தார். அது, ‘தாங்கள் தான் தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி. தங்கள் தலைமையில்தான் தமிழ்நாட்டில் கூட்டணி’ என்ற கருத்தை தொடர்ந்து முன்னிலைப்படுத்திவரும் பாஜகவுக்கான மறைமுக பதில் என்கிறார்கள்.
அதோடு மட்டும் ஈபிஎஸ் நிறுத்திவிடவில்லை. 25 தொகுதிகளில் பாஜக வெல்லும் என்ற அமித்ஷாவின் பேச்சுக்கும், பாஜகவுடன்தான் அதிமுக கூட்டணி வைத்தாகவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது என்ற பேச்சுக்களுக்கும் சேலத்தில் அளித்த பேட்டியில் பதில் சொல்லியிருக்கிறார் ஈபிஎஸ்.
”அதிமுக யாருக்கும் அடிமை இல்லை. கொள்கையின் அடிப்படையில்தான் கூட்டணி அமைக்கப்படுகிறது. அதிமுக ஆலமரம் போல் பரந்து விரிந்து வளர்ச்சியடைந்துள்ளது. தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி என்றால் அது அதிமுகதான். கூட்டணி என்பது அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு, தேர்தல் நேரத்தில் அமைக்கப்படுகிறது. 25 தொகுதிகளில் பாஜக வெல்லவேண்டும் என அமித்ஷா கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அதிமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது. அதற்காக பணியாற்றி வருகிறோம்” என்று சொன்னதன் மூலம் பாஜகவுக்கு கூட்டணி பயம் காட்டியிருக்கிறார் ஈபிஎஸ்.
ஈபிஎஸ் இந்தளவுக்குபேச அதிமுகவின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள்தான் முக்கிய காரணம் என்கிறார்கள். அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய பெரும்பாலான நிர்வாகிகள் பாஜக மற்றும் அண்ணாமலைக்கு எதிராக அந்தளவுக்கு கொந்தளித்திருந்தார்கள். அந்த கூட்டத்தில் அண்ணாமலையின் பேட்டியே முக்கிய விவாதப் பொருளாக இருந்திருக்கிறது. ஒருசில முன்னாள் அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும் பாஜகவுடனான கூட்டணி முறிந்துவிட்டதாக அறிவிக்க வேண்டுமென ஈபிஎஸ்ஸை அந்தக் கூட்டத்தில் வலியுறுத்தியாகவும் சொல்கிறார்கள்.
ஆனால் வழக்குகள், ஆளும் திமுகவை சமாளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளிட்ட பல விஷயங்களையும் யோசித்துப்பார்த்த ஈபிஎஸ், அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தை மட்டும் நிறைவேற்றினார். வேறு யாரையும் இதுகுறித்து பேசவிடாமல் அவரே செய்தியாளர்களை சந்தித்து கண்டன தீர்மானத்தை மட்டும் வாசித்துவிட்டு, கூட்டத்தைக் கலைத்துவிட்டார். இதன் பிறகு, அதிமுக முன்னணியினர் யாரும் பொதுவெளியில் இதுகுறித்து எதுவும் பேசவில்லை. இந்தப் பிரச்சினையை இதற்கு மேல் இழுக்க வேண்டாம் என ஈபிஎஸ் அறிவுறுத்தி இருந்ததே இதற்குக் காரணம்.
ஆனால் அதன் பிறகு நடந்த சில விஷயங்கள் ஈபிஎஸ்ஸின் முடிவை மறுபரிசீலனை செய்ய வைத்திருக்கிறது என்கிறார்கள். அதிமுகவின் கண்டனத் தீர்மானம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அண்ணாமலை, "கூட்டணிக் கட்சியையும், கூட்டணித் தலைவர்களையும் நடத்தும் விதம் குறித்து எனக்கு யாரும் எடுத்துச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை" என்று குறிப்பிட்டார். அத்துடன், தான் கூறியதில் எந்தத் தவறும் இல்லை என்று அவர் மீண்டும் மீண்டும் சொல்லிவருவதும், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதும் ஈபிஎஸ்ஸுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகச் சொல்கிறார்கள். அந்த அதிருப்தி தான் அவரது சேலம் பேட்டியில் வெளிப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
ஜெயலலிதா காலத்தில் அதிமுக கூட்டணித் தலைமை எப்படி இருந்தது... கூட்டணிக்கட்சிகளை அவர் எப்படி நடத்துவார் என்பதையெல்லாம் ஈபிஎஸ்ஸுக்கு அதிமுக முன்னணி நிர்வாகிகள் சிலர் மீண்டும் நினைவுபடுத்தியதுடன், அதுபோன்ற கெத்தான நிலைக்கு அதிமுகவை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதையும் எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.
இத்தனைக்கும் பிறகே பாஜகவுக்கு துணிச்சலாக பதில் சொல்லும் முடிவுக்கு ஈபிஎஸ் வந்திருக்கிறார். பாஜக கூட்டணியில் இருந்து விலகலாம் என்ற எண்ணத்தை ஈபிஎஸ்ஸுக்கு ஈரோடு இடைத்தேர்தல் களமே உணர்த்திவிட்டது. அதிமுக வேட்பாளருக்கு ஆதரவளிக்க பாஜக காலம் தாழ்த்திய நிலையில், அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்தார் ஈபிஎஸ். பாஜகவை தேர்தல் பிரச்சாரத்திற்கு கூப்பிடவில்லை.
ஈபிஎஸ் இப்படி துணிந்த பிறகு தான் பாஜக வலியவந்து அதிமுகவுக்கு ஆதரவு அளித்தது. இந்தநிலையில் அண்மைக்கால அண்ணாமலையின் பேச்சும், செயலும் அதிமுகவினரை சிறுமைப்படுத்தும் விதமாக இருப்பதும், அதிமுகவை ஒரு பொருட்டாகவே அவர் கருதவில்லை என்பதும் ஈபிஎஸ்ஸை மீண்டும் யோசிக்க வைத்திருக்கிறது.
அண்ணாமலை தான் இப்படி, ஆனால் பாஜக மேலிடத் தலைவர்கள் நமக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று ஈபிஎஸ் நினைத்தார். ஆனால் தமிழகம் வந்த அமித்ஷா, தங்களைச் சந்திக்க நினைக்காததும் தென் சென்னை, வேலூர் மக்களவைத் தொகுதிகளை குறிவைத்து பேசிச் சென்றிருப்பதும் ஈபிஎஸ்ஸை ஆழமாக சிந்திக்க வைத்திருக்கிறது. 25 தொகுதிகளில் வெல்வோம் என்று அமித் ஷா பேசியதும் பாஜகவின் திட்டம் என்னவாக இருக்கிறது என்பதை ஈபிஎஸ்ஸுக்கு உணர்த்திவிட்டதாகச் சொல்கிறார்கள். அதனால் தான் “அமித்ஷா சொல்லியிருப்பது அவரது கருத்து” என்று துணிச்சலாக பதில் சொல்லிய ஈபிஎஸ், “நாற்பது தொகுதிகளிலும் அதிமுகவே வெல்லும்” என்றும் கெத்து காட்டியிருக்கிறார்.
அதிமுகவின் தற்போதைய நிலைப்பாடு குறித்து முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் பேசினோம். "அண்ணாமலை ஒரு தவறான விஷயத்தை சொன்னார். அதற்கு அதிமுக சார்பில் எங்களது எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்தோம். அவரும், ‘தவறான அர்த்தத்தில் நான் எதையும் கூறவில்லை’ என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார். 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெல்லும் என்ற அர்த்தத்தில்தான் எடப்பாடியார் சொல்லியிருக்கிறார். தனித்துப் போட்டியிடுவோம் என்பதாக சொல்லவில்லை.
எதிரிகள் கூட்டணி அமைத்திருக்கும்போது எங்கள் முகாமிலும் கூட்டணி அமைத்துத்தான் போட்டியிடுவோம். ஆனால், கூட்டணி குறித்து இப்போதைக்கே எதையும் சொல்லிவிட முடியாது. ஒரு நிமிடத்தில் ஒரு கட்சி சேரும் ஒரு கட்சி விலகும். அதனால் தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில்தான் கூட்டணி இறுதியாகும், உறுதியாகும்" என்றார் அவர்.
ஈபிஎஸ் கோபமடைந்திருப்பதையும், பாஜகவுக்கு எதிராக பேச ஆரம்பித்திருப்பதையும் பாஜக முகாமும் உணர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் தான், “ பாஜக தலைமையில் கூட்டணி” என்று இத்தனை நாளும் முழங்கிவந்த அண்ணாமலை இப்போது, “அதிமுகவுடன்தான் கூட்டணி” என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார். பாதுகாப்புக் காரணங்கள் கருதி ஈபிஎஸ்ஸுக்கு விமான நிலையங்களில் விமானம் வரை காரில் செல்ல அனுமதி வழங்கி மத்திய அரசும் அவரை சமாதானப்படுத்தி இருக்கிறது.
இப்போதைக்கு ஈபிஎஸ் கொஞ்சம் எகிறி அடித்திருக்கிறார். அதனால் பாஜக கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறது. தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுகவை வழிக்குக் கொண்டுவர மீண்டும் பாஜக தனது பவரைக் காட்டும், அந்த நேரத்தில் வேறு வழியில்லாமல் அதிமுகவும் பம்மிப் பதுங்கும். இந்த அரசியல் பரமபத விளையாட்டு மக்களவைத் தேர்தல் வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்!