கருணாநிதி குறித்து அவதூறு: சீமான் மீதான வழக்கில் கரூர் நீதிமன்றம் ஆக.29-ல் விசாரணை


சீமான் (கோப்புப் படம்)

கரூர்: முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து சீமான் அவதூறு பாடல் பாடியது தொடர்பாக கரூரை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கு கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆக.29 விசாரணைக்கு வருகிறது.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பாடல் பாடினார். இதுகுறித்து திருச்சி மாவட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆக.4-ம் தேதி சாட்டை துரைமுருகன் பாடல் குறித்து பேசி, அதே பாடலை நானும் பாடுகிறேன். காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கிறது பார்க்கிறேன் எனக்கூறி பாடல் பாடினார். மேலும் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.

இதையடுத்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மேற்கண்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி கரூரை சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் ஆக.5ம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். ஆக.14ம் தேதி தாந்தோணிமலை காவல் நிலையம், எஸ்.பி. அலுவலகத்துக்கு புகார் அனுப்பினார். இவற்றில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் வழக்கு தொடர்ந்தார். அவர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஆக. 29-ம் தேதி எடுத்துக் கொள்வதாக கரூர் குற்றவியல் நடுவர் (பொ) மகேஸ் தெரிவித்துள்ளார்.

x