அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகரில் சப்தமில்லாமல் கடந்த 17 வருடங்களாக தமிழ் வளர்த்து சாதித்து வருகிறார்கள் வேலுராமன், விசாலாட்சி தம்பதியர். இந்த வருடம் இவர்களது சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் 17வது “ஒரு குறள் ஒரு டாலர்” போட்டியில் பங்கேற்ற இரண்டு மாணவ மாணவிகள் புதிய சாதனை படைத்துள்ளனர்.
10 வயது மாணவி லயா ரச்னா ப்ரவீன் மற்றும் 13 வயது மாணவன் அர்ஜுன் ஷண்முகமணி, 1330 திருக்குறளையும் பொருளுடன் ஒப்புவித்து 'குறள் இளவரசி’, ’குறள் இளவரசன்’ பட்டத்தை வென்றுள்ளனர்.
நிலை 1 பிரிவில், 6 வயது ஆதவன் செந்தில்குமார் 500 திருக்குறள்களை ஓதி முதல் பரிசு பெற்றுள்ளார்.
3 வயது பாவலன் பார்த்திபன், 65 திருக்குறள்களைக் கூறி மழலை பிரிவில் சாதனை படைத்துள்ளார். 2வயது ஆதேஷ் மணிகண்ட நிர்மல்குமார் நிகழ்ச்சியின் மிக சிறுவயது பங்கேற்பாளராக வெற்றி பெற்றிருக்கிறார். நிலை 1 பிரிவில், 6 வயது ஆதவன் செந்தில்குமார் 500 திருக்குறள்களைக் கூறி முதல் பரிசினை வென்றுள்ளார்.
நிகழ்ச்சியில் நடைபெற்ற ஆத்திச்சூடி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளிலும் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று பரிசுகளை வென்றனர்.
’குறளரசன்’ செந்தில்செல்வன் துரைசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பங்குபெற்ற அனைவரையும் பாராட்டிப் பேசினார். சாஸ்தா தமிழ் அறக்கட்டளை மற்றும் ப்ளேனோ தமிழ்ப்பள்ளி நிறுவனர்கள் வேலு ராமன், விசாலாட்சி வேலு தம்பதியினர் பெற்றோர்கள் உட்பட அனைவரையும் வரவேற்று உற்சாகப்படுத்தினர்.
சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் சார்பில் முன்னதாக டல்லாஸில் நடைபெற்ற திருக்குறள் போட்டிகளில். கீதா அருணாச்சலம், முனைவர்.சித்ரா மகேஷ், சீதா பாலாஜி, செந்தில்செல்வன் துரைசாமி, தனிஷ் சட்டநாதன், அபிராமி இளங்கோவன், ஸ்ரீபாலாஜி ராஜமாடசாமி ஆகிய ஏழு பேர்1330 திருக்குறளையும் கூறி குறளரசி, குறளரசன், குறள் இளவரசி, குறள் இளவரசன் பட்டங்களை வென்றுள்ளனர்.
டல்லாஸ் மட்டுமல்லாமல், அமெரிக்காவின் பிற பகுதிகளில் நடைபெறும் திருக்குறள் போட்டிகளிலும் மாணவ மாணவியர்களும், பெரியவர்களும் பங்கேற்று சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர்.
திருக்குறள் அமெரிக்கத் தமிழர்களின், குறிப்பாக தமிழ் மொழி கற்று வரும் குழந்தைகளின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறி விட்டதாகவே உணர முடிகிறது.
அமெரிக்காவில் டல்லாஸ் நகரில் 17 ஆண்டுகளுக்கு முன்னதாக சாஸ்தா தமிழ் அறக்கட்டளையால் தொடங்கப்பட்ட ‘ஒரு குறள் ஒரு டாலர்’ போட்டியின் வழியில் அமெரிக்கா முழுவதும் பரவலாக நடைபெற்று வரும் திருக்குறள் போட்டிகளில் இளம் தலைமுறையினர் தொடர்ந்து சாதனைகள் படைத்து வருகின்றனர். இந்தப் போட்டிகள் மூலம் தமிழ்நாடு உள்பட உலகம் முழுவதும் திருக்குறள் மீது புதிய ஆர்வமும் எழுச்சியும் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலில் அயலகத் தமிழர் நல அமைச்சர் செஞ்சி மஸ்தான், அயலகத் தமிழர் நலவாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி ஆகியோர் இத்தகைய திருக்குறள் போட்டிகளுக்கு ஊக்கமளித்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வாழ்வில் திருக்குறள் ஒரு அங்கமாக மாறுவதற்கும், நடைபெறுவதற்கும் உறுதுணையாக உரிய முயற்சிகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இயல்பாக எழுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
தொடக்கக் கல்வித்துறையில் 1768 காலிப்பணியிடங்கள்...பிப்.14 முதல் விண்ணப்பிக்கலாம்!