கோவை: கோவை மாவட்டம் சூலூர் வட்டாரத்துக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆய்வு மேற்கொண்டார்.
கண்ணம்பாளையத்தில் 11.20 ஹெக்டர் பரப்பளவில் அரசு தோட்டக்கலை பண்ணை சீரிய முயற்சியால் புதுப்பிக்கப்பட்டு புதிய தொழில் நுட்பங்களுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே அதிக அளவில் ஆண்டுக்கு 50 டன் டிரைகோடெர்மா, விரிடி எனும் புஞ்சாணக் கொல்லி உற்பத்தி செய்யப்படுகிறது. சம்பங்கி மலர்களிலிருந்து கான்கீரிட் பிரித்தல், மண்புழு உரம் உற்பத்தி செய்தல் டிராகன் பழச்செடி வளர்ப்பு போன்ற செயல் விளக்க திடல்கள் செயல்பட்டு வருகிறது.
ஒரு ஆண்டுக்கு 50 லட்சம் மதிப்பிலான பழச்செடிகள், குழித்தட்டு நாற்றுகள், மூலிகைச் செடிகள், அலங்கர செடிகள் மற்றும் டி.விரிடி, மண்புழு உரம் போன்ற இடுபொருள்கள் தரமான முறையில உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு பல்வேறு மானியத்திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர அழுகும் பொருட்களுக்கான விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் சூலூரில் முதன்மை பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
வாழை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் நடத்தி வருகின்றனர். காய்கறிகள் மற்றும் வாழை வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, கத்தார் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நேந்திரன், கதளி வாழைகளை காய்கறியாக மற்றும் பழமாக பயன்படுத்தவும், ஏற்றுமதியும் செய்யப் படுகிறது. கொச்சின் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மாதந்தோறும் 100 மெட்ரிக் டன் அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேற்குறிப்பிட்ட வளாகங்களில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆய்வு செய்தார்.
மேலும், சூலூர் அரசு மருத்துவமனையில் ‘எக்ஸ்ரே அறை’, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு மருத்துவ அறை உள்ளிட்டவற்றையும், ரேஷன் கடைகளையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கணியூர் ஊராட்சியில், கலைஞர் கனவு இல்லம் என்ற திட்டத்தின் கீழ் மாதிரி வீடு ரூ.3.50 லட்சம் மதிப்பில் கட்டுப்பட்டு வருவதையும் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.