மதுரையில் 15 பேருக்கு ‘டெங்கு’: 530 பணியாளர்களை களமிறக்கிய மாநகராட்சி


கோப்புப் படம்

மதுரை: மதுரையில் இதுவரை 15 பேருக்கு ‘டெங்கு’ காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு மிக குறைவாக இருந்தாலும் பாதிப்பை தடுக்க 530 டெங்கு கொசுப்புழு ஒழிப்பு (DBC) பணியாளர்களை 100 வார்டுகளில் களமிறக்கி உள்ளது மாநகராட்சி நிர்வாகம்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மதுரை மாநகராட்சியில் மழைக்கால நோய்களும் ஏற்படத் தொடங்கியுள்ளது. மழைநீரால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி ஆங்காங்கே டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் தமிழகத்திலே மதுரையில் அதிகளவு டெங்கு பாதிப்பு இருந்துள்ளது. அதனால், டெங்கு பாதிப்பை தடுக்க, மாநகராட்சில் கடந்த சில ஆண்டாகவே ஒவ்வொரு ஆண்டும் வீடு வீடாகச் சென்று டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் நடக்கின்றன.

அப்படியிருந்தும் இந்த ஆண்டும் மதுரையில் டெங்கு பாதிப்பு ஆங்காங்கே கண்டறியப்பட்டுள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு பாதித்த நோயாளிகள் தொடர்ச்சியாக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள், இது தொடர்பாக குற்றம்சாட்டியபோது, மாநகர நகர் நல அதி்காரிகள், மாநராட்சியில் பாதிப்பு மிக குறைவு என்றும், புறநகர் பகுதிகளில் இருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரக் கூடியவர்களை மாநகராட்சி பாதிப்பு என கருதக்கூடாது என்றும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகளுடன் டெங்கு கொசுவை தடுக்க இன்று மேயர் இந்திராணி ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், "மதுரை மாநகராட்சியில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைக்கப்பட்டு கட்டுப்பாட்டில் உள்ளது. 2023ம் ஆண்டு மே முதல் ஆகஸ்ட் வரை 89 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அடைந்தனர். 2024ம் ஆண்டு மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை 15 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சல் பாதிப்பு அடைந்துள்ளனர். ஆக, கடந்த ஆண்டை விட டெங்கு காய்ச்சல் தொற்று பாதிப்பு மிகக்குறைவாகவே உள்ளது.

டெங்கு பரவலை கட்டுப்பாட்டில் வைப்பதற்கு மாநகராட்சியின் மூலம் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை மாநகர் நல அலுவலர் அவர்கள் தலைமையில் டெங்கு தடுப்புப் பணிகள் அனைத்து வார்டுகளிலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 530 டெங்கு கொசுப்புழு ஒழிப்பு (DBC) பணியாளர்களை கொண்டு வீடு வீடாக சென்று கொசுப் புழுக்களை அழித்தும், பொதுமக்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்தப்பட்டும் வருகிறது. டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கொசு மருந்து புகை பரப்பும் (Fogging) பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அலுவலர்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து தேவையான மருத்துவ சிகிச்சை வழங்கவும் நோயின் தன்மையை பொறுத்து தேவைக்கேற்ப அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும் பரிந்துரை செய்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு மூலம் பொது மக்களுக்கு குடிநீர் வழங்கக் கூடிய நீர்த்தேக்கத் தொட்டியில் 15 நாட்களுக்கு ஒரு முறை குளோரினேசன் செய்து சுகாதாரமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யப்படுகிறது.

பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய வீடு மற்றும் வீட்டின் சுற்றுப்புறத்தை ஏடீஸ் கொசுக்கள் வளராத வண்ணம் தங்களது வீட்டில் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தைச் சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் பயன்பாடற்ற பேப்பர், டீ கப், தேங்காய் சிரட்டைகள், தெர்மாக்கோல் போன்ற பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். குளிர்சாதனப் பெட்டியில் தேங்கும் தண்ணீரை அவ்வப்போது அப்புறப்படுத்த வேண்டும். வீட்டின் பயன்பாட்டிற்காக சேகரித்தும் வைக்கும் தண்ணீர் தொட்டிகள் வாரம் ஒரு முறை சுத்தம் செய்து மூடி வைக்கப்பட வேண்டும். வீட்டின் அருகாமையில் ஆட்டுக் கல் உள்ளிட்டவை இருந்தால் அவற்றில் நீர் தேங்காத வண்ணம் கவிழ்த்து வைக்கப்பட வேண்டும்" என்று மேயர் இந்திராணி கூறினார்.

x