போராட்டத்திற்கு பணிந்தது அரசு: மேலூர் கிரானைட் குவாரிகள் ஏலம் ஒத்திவைப்பு!


கிரானைட் குவாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மூன்று கிராமங்களில் கிரானைட் குவாரிகள் அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்த நிலையில் ஏலம் ஒரு மாதத்துக்கு ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதுரை மேலூர் அருகே சேக்கிபட்டி, அய்யாபட்டி, திருச்சுனை உள்ளிட்ட கிராமங்களில் மூன்று கிரானைட் குவாரிகள் நடத்த மதுரை மாவட்ட நிர்வாகம் பொது ஏலம் விடுத்து டெண்டர் கோரி இருந்தது. விவசாயத்தை அழித்து கிரானைட் குவாரிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சேக்கிபட்டி ஊர் மந்தையில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அதையடுத்து மேலூர் வட்டாட்சியர் செந்தாமரை, மதுரை மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். கிரானைட் குவாரிக்கு அனுமதி அளிக்கக்கூடாது என ஏற்கெனவே பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் அளித்த மனு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வட்டாட்சியர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை ஏற்காமல் பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். பெண்கள் இரவிலும் அங்கேயே படுத்து உறங்கி போராட்டம் நடத்தினர்.

பெண்கள் போராட்டம்

கிரானைட் குவாரிகள் ஏலம் விடப்படும் விவகாரத்தில் அரசு உறுதியுடன் இருந்தால் தங்களது ரேஷன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அரசிடம் ஒப்படைத்து விடுவோம் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று அப்பகுதி கிராம சபை கூட்டங்களில் கிரானைட் குவாரிகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து நிர்வாக நலன் கருதி கிரானைட் குவாரிகளுக்கான பொது ஏலத்தை நவம்பர் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். இது பொது மக்களின் போராட்டத்திற்கு கிடைத்துள்ள தற்காலிக வெற்றியாக பார்க்கப்படுகிறது.

x