செல்லாக்காசுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை; அண்ணாமலை ஆவேசம்!


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

செல்லாக்காசுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று திருவள்ளூரில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் ’என் மண் என் மக்கள்’ யாத்திரையை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அவர், “செல்லாக்காசாக இருந்து வரும் ஆர்.பி.உதயகுமாருக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை. பணத்தை கொள்ளையடித்து ஐந்தாண்டுகளுக்கு மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேலைகளின், தாரக மந்திரம் எல்லாம் எனக்கு தெரியாது. மீடியோ வெளிச்சத்திற்காக என்னை பற்றி பேசும் செல்லாக்காசுகளுக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை. கடுமையான வார்த்தைய பயன்படுத்த எனக்கும் தெரியும். ஆனால் அதற்கு அவசியம் இல்லை. அவர்களுக்கு என் மீது கோபம் வருவதால், என் கட்சி சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக அர்த்தம்” என்றார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

மேலும், “என்னை திட்டத்திட்ட, பாஜகவும் நானும் சரியான பாதையில் செல்வதற்கான குறியீடாக எடுத்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி தமிழகத்திற்கு எந்த குறையும் வைக்கவில்லை. அருமையாக அனைத்தும் கொடுத்து வருகிறார். தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய வெள்ள நிவாரண நிதியை தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மை துறைக்கு மத்திய அரசு 1,300 கோடி ரூபாய் கொடுத்திருப்பதை எடுத்து செலவு செய்யாமல் வைத்துள்ளனர். தமிழக அரசு கேட்டுள்ள 38 ஆயிரம் கோடி வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு அளிக்கும். எந்த மாநிலத்திற்கும் வெள்ள நிவாரண நிதியை அளிப்பதற்கு மத்திய அரசு குறை வைக்கவில்லை” என்றார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

தொடர்ந்து பேசிய அவர், “பாஜக, தமிழ்நாட்டில் தனித்து நின்றால் 21% வாக்குகள் பெற முடியும் என ஏற்கனவே டைம்ஸ் ஆப் இந்தியா கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் இந்திய டுடே சி வோட்டர் கருத்துக்கணிப்பு 16 சதவீதம் வாக்குகளை பாஜக தமிழ்நாட்டில் தனித்து நின்றால் பெற முடியும் என கூறியுள்ளது. இதனால் வருகின்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்து 30 சதவீதம் வாக்குகள் பெறும். 23 சதவீதம் வாக்குகள் வந்தாலே அவைகள் சீட்டுகளாக மாறும் போது, 30 சதவீதம் வாக்குகள் பெற்றாலே வேட்பாளர்கள் வெல்ல முடியும்” என்று தெரிவித்தார்.

அதிமுக கதவு சாத்தப்பட்டு இருப்பதாக ஜெயக்குமார் கூறிய கருத்து குறித்து கேட்ட போது, ”அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் கதவை உடைத்துக்கொண்டு பாஜகவில் சேர்ந்து உள்ளனர். நாங்கள் கதவைத் தட்டி எங்கேயும் போக விரும்பவில்லை. அவர்களே கதவை திறந்து கொண்டு வருகின்றனர்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

x