நாட்டின் மிகப்பெரிய பயங்கரவாதி நான்தானா? - பாஜகவை கேள்விகளால் துளைக்கும் கேஜ்ரிவால்!


நாட்டின் மிகப் பெரிய பயங்கரவாதி நான் தான் என்பது போல, ஒட்டுமொத்த ஏஜென்சியும் காவல்துறையும் என்னையே குறிவைத்து வருகின்றன என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி துவாரகா செக்டார் 1ல் உள்ள அரசுப் பள்ளிக் கட்டடத்துக்கு முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று அடிக்கல் நாட்டினார். அப்பொழுது பேசிய கேஜ்ரிவால், “ டெல்லியில் மின்சாரம் இலவசம். தண்ணீர் இலவசம். டெல்லியில் கல்வி இலவசம். டெல்லியில் சிகிச்சை இலவசம். டெல்லி டிடிசி பஸ்சில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். முதியோர்களுக்கு யாத்திரை இலவசம். இதன் காரணமாக நாட்டிலேயே டெல்லியில் பணவீக்கம் குறைவாக உள்ளது.

அர்விந்த் கேஜ்ரிவால்

மணீஷ் சிசோடியாவை திருடன் என்று பாஜக கூறி வருகிறது. மணீஷ் ஏழைக் குழந்தைகளுக்காக அற்புதமான பள்ளிகளைக் கட்டினார். மணீஷ் ஏழைகளின் குழந்தைகளுக்கு எதிர்காலத்தைக் கொடுத்தார். ஆனால், குஜராத் மற்றும் உத்தரபிரதேசத்தில் அரசு பள்ளிகள் மூடப்பட்டு தனியார் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஏழைகளின் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் கட்டுபவன் திருடனா அல்லது பள்ளியை மூடுகிறவன் திருடனா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “எனது கடைசி மூச்சு வரை டெல்லி மக்களுக்கு சேவை செய்வேன். என்னுடைய ஒவ்வொரு சொட்டு ரத்தமும், ஒவ்வொரு துளியும் நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. எங்களை தடுக்க பாஜக எத்தனையோ வழக்குகள் போட்டது. சில நேரங்களில் சிபிஐ நோட்டீஸ், சில சமயம் அமலாக்கத்துறை நோட்டீஸ். எனக்கே புரியவில்லை. நாட்டின் மிகப் பெரிய பயங்கரவாதி நான் தான் என்பது போல, ஒட்டுமொத்த ஏஜென்சியும் காவல்துறையும் என்னையே குறிவைத்து வருகின்றன.

அரவிந்த் கேஜ்ரிவால்

கடவுள் பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனையும் ஏதோ ஒரு நோக்கத்துடன் அனுப்பியுள்ளார் என்று பகவத் கீதையில் எழுதப்பட்டு உள்ளது.பொய்யான வழக்குகள் போட்டு, அனைவரையும் சிறையில் அடைத்து, நோட்டீஸ் அனுப்பும் நோக்கத்தில் அவர்களை பூமிக்கு அனுப்பி உள்ளார். ஆனால் நான் உங்களுக்காக பள்ளி, மின்சாரம், தண்ணீர் வசதிகளை செய்து தருவதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்" என்று கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

x