சேலம்: ஏற்காட்டில் பெய்த கனமழையால் குப்பனூர் மலைப்பாதையில் மூன்று இடங்களில் ஏற்பட் மண் சரிவை நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அகற்றினர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஏற்காட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், குளுமையான சீதோஷ்ண நிலை நீடித்து வருகிறது. மேலும், பனி மூட்டம் காரணமாக பகலில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி செல்லும் நிலை உள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் ஏற்காடு மலைப்பாதையில் உள்ள 18-வது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக ஏற்காடு குப்பனூர் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த சாலையில் மூன்ற இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் பொக்லைன் வாகனம் மண் சரிவை அகற்றினர். இதனால் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு சரிந்த மண் அகற்றப்பட்ட பின்னர் அனுமதிக்கப்பட்டது.
ஏற்காட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக மலைப்பாதையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மண் சரிவு ஏற்படும் இடங்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.