தொடர் கனமழையால் 65 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம் - 24 மணி நேரமும் ‘அலர்ட்’


ஆண்டிபட்டி: தொடர் கனமழையால் வைகை அணையின் நீர்மட்டம் நேற்று 65 அடியை எட்டியது. இதனால் நீர்தேங்கும் பரப்பு வெகுவாக அதிகரித்து, அணை நீர் கடல்போல காட்சியளிக்கிறது.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களின் முக்கிய குடிநீர், பாசனநீர் ஆதாரமாக வைகை அணை உள்ளது. தேனி மாவட்டம், வருசநாடு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழை சிற்றாறுகளாக பெருக்கெடுத்து மூலவைகையாக உருவெடுக்கிறது.

இம்மாதத்தின் தொடக்கத்தில் அணைக்கு நீர்வரத்து குறைவாகவே இருந்தது. இதனால், ஆக.1-ம் தேதி நீர்மட்டம் 56.20 அடியாக (மொத்த உயரம் 71) இருந்தது. இந்நிலையில், வெள்ளிமலை, அரசரடி உள்ளிட்ட பகுதி களில் தொடர்ந்து கனமழை பெய்யத் தொடங்கியது. மேலும், முல்லை பெரியாறு அணையில் இருந்தும் சராசரியாக விநாடிக்கு 1,500 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, கடந்த 5-ம் தேதி 56 அடியாக இருந்த நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து நேற்று 65 அடியை எட்டியது. இதனால் நீர் தேங்கும் பரப்பளவு 5 கி.மீட்டருக்கு பரந்து விரிவடைந்து கடல் போல காட்சியளிக்கிறது. தற்போது, காற்றின் வேகம் காரணமாக, கரையில் அலைகள் பலமாக மோதுகின்றன.

66 அடியில் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் படுவது வழக்கம். இதற்காக நீர்வரத்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது, நீர்வரத்து விநாடிக்கு 687 கனஅடியாக உள்ளது. 469 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். நீர்வளத் துறை அதிகாரிகள் கூறு கையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்வரத்து அதிகரித் துள்ளதுடன். அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர வாய்ப்புள்ளது என் றனர்.

x