காவிரி பிரச்சினையில் இரு மாநிலங்களுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படும்: முன்னாள் பிரதமர் தேவகவுடா நம்பிக்கை


திருச்சி: காவிரி பிரச்சினையில் இரு மாநிலங்களுக்கும் ஒருமித்த கருத்துஏற்படும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறினார். பெங்களூருவிலிருந்து தனிவிமானம் மூலம் முன்னாள் பிரதமர் தேவகவுடா நேற்று திருச்சி வந்தார். விமான நிலையத்திலிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்ற அவர் ரங்கநாதர், தாயார் உள்ளிட்ட சந்நிதிகளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்துள்ளேன். எனது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தாலும், நாட்டு மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். காவிரி பிரச்சினை குறித்து தமிழகத்தில் தற்போது உள்ள ஆட்சியாளர்களுக்கும், முன்பு ஆட்சி செய்தவர்களுக்கும் முழுமையான விவரங்கள் தெரியும். கர்நாடகாவில் பெங்களூரு உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர். இதில் ஒளிவுமறைவு எதுவும் இல்லை.

காவிரி பிரச்சினையில் இரு மாநிலங்களுக்கும் ஒருமித்த கருத்துஏற்படும் நாள் விரைவில் வரும். அப்போது இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

x